வெள்ள நீரில் மூழ்கிய வாகனங்களை இயக்க வேண்டாம் என நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு மாநில போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த 3 தினங்களுக்கு முன்னர் தென்மாவட்டங்களில் பெய்த மழையால் தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உடுத்த துணி தவிர மாற்று துணிகளுக்கு வழி இல்லாத நிலைமையை வெள்ளம் உருவாக்கியது. வீடுகளில் உள்ள பொருட்கள் அடித்து செல்லப்பட்டும், வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டும் வீணடிக்கப்பட்டு விட்டது. வீடுகளில் வளர்த்து வந்த கால்நடைகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வதென்று தெரியாத நிலைமையில் தென்மாவட்ட மக்கள் உள்ளனர். இந்த நிலையில் இருந்து மீண்டும் முந்தைய நிலைமைக்கு திரும்புவதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை ஆகும்.
இந்நிலையில் வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை ஸ்டார்ட் செய்ய வேண்டாம், மழை பாதிப்புக்குள்ளான வாகனங்களை பழுதுநீக்காமல் இயக்குவதன் மூலம் வாகனங்களில் பெரிய அளவு பாதிப்பு நேரிடும் என மாநில போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். மற்ற வாகனத்தின் உதவியுடன் பாதிக்கப்பட்ட வாகனத்தை சேவை மையத்திற்கு எடுத்துச் செல்வதே சிறந்ததாக இருக்கும் எனவும், காப்பீட்டு நிறுவனங்கள் மக்கள் எளிதில் இழப்பீடு பெறுவதற்கு ஏதுவாக முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.