இளம் வயதினர் மேற்கொள்ள விரும்பும் உடற்பயிற்சிகளில், `பிளாங்க்’ வகை பயிற்சிக்கு தனி இடம் உண்டு. அதிலும் `புரோன் பிளாங்க்’ பயிற்சியை, வீட்டில் இருந்தபடி யே மேற்கொண்டு உடல்நலனை வலுப்படுத்தலாம். குறிப்பாக உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள ஆர்வம் காட்டுபவர்களுக்கும், உடலில் இருந்து அதிக கலோரிகளை எரிக்க
விரும்புபவர்களுக்கும் இது உதவும்.
இதனை உடற்பயிற்சிக்கு முன்பு மேற்கொள்ளப்படும் வார்ம்-அப் பயிற்சியாகவோ, அன்றாட பயிற்சிகளுடன் இணைத்தோ தினமும் செய்து வரலாம். இடுப்புக்கு மேலிருக்கும் பகுதிகளுக்கும், வயிற்றுப் பகுதிக்கும் இந்த பயிற்சி வலிமை சேர்க்கும். குறிப்பாக இதய செயல்பாட்டை மேம்படுத்தும். ரத்த ஓட்டம் சீராக நடைபெறவும் துணை புரியும்.
இடுப்புக்கு மேலிருக்கும் பகுதிகளுக்கும், வயிற்றுப் பகுதிக்கும் இந்த பயிற்சி வலிமை சேர்க்கும். குறிப்பாக இதய செயல்பாட்டை மேம்படுத்தும். ரத்த ஓட்டம் சீராக நடைபெறவும் துணை புரியும்.
எப்படி செய்வது?
தரையில் குப்புறப்படுத்துக்கொண்டு, முழங்கையை மடித்து ஊன்றி, கால் விரல்களையும் ஊன்றி, உடலை மேல்நோக்கி உயர்த்த வேண்டும். அப்போது தரையில் இருந்து உடல் பகுதி முழுவதும் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். அடுத்ததாக, வலது பக்க கை மூட்டுக்கு அருகில், வலது பக்க காலை கொண்டு வர வேண்டும். பிறகு, காலை பின்னுக்கு இழுக்க வேண்டும். இதேபோல, இரண்டு கால்களிலும் செய்யலாம். கால் மூட்டு, கையின் மூட்டை தொடுவதுதான் இந்த பயிற்சியின் அடிப்படை.
தொடர்ந்து சில நாட்கள் மேற்கொண்ட பின்னர், கால் மூட்டு கையின் மேல் பகுதியை தொடும்வரை உயர்த்தலாம். ஒரு பயிற்சிக்கு 15 முதல் 30 விநாடிகள் வரை நேரம் எடுத்துக்கொண்டு, 10 முதல் 15 முறை செய்யலாம்.
நன்மைகள்:
* ஒவ்வொரு பயிற்சியும் எந்தெந்த பகுதிகளுக்கு நன்மை சேர்க்கும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
* புரோன் பிளாங்க் தொடர்ந்து செய்து வந்தால் உடல் எடை சீராக இருக்கும். வயிற்றைச் சுற்றியிருக்கும் தசைகள் வலுப் பெறும். மேலும் தேவையில்லாத கொழுப்புகள் கரையும்.
* விளையாட்டு வீரர்களுக்கு, பிளாங்க் சிறந்த பயிற்சியாக கருதப்படுகிறது. குறிப்பாக, ஓடுபவர்களுக்கும், கால்பந்து வீரர்களுக்கும் ஏற்றது. எளிதில் சோர்வு அடைபவர்கள் இந்த பயிற்சியை தினமும் காலையில் செய்து வந்தால், புத்துணர்வு பெறலாம். தினசரி வேலைகளை சுறுசுறுப்புடன் செய்வதற்கு இந்த பயிற்சி உதவும். முதுகுவலிக்கும் சிறந்த தீர்வு அளிக்கும்.
கவனத்தில்கொள்ள வேண்டியவை:
பிளாங்க் உடற்பயிற்சியில் பல வகைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனை தரும். அதனால் முதலில் பிளாங்க் உடற்பயிற்சிக்கான அடிப்படையை கற்றுக்கொண்டு, பிறகு புரோன் பிளாங்க், ஸ்பைடர்மேன் பிளாங்க் என நீளும் அதன் வகைகளை முயற்சி செய்து பார்க்கலாம்.
பிளாங்க் செய்வதற்கு, மூச்சுப்பயிற்சி அடிப்படையானது. பிளாங்க் பயிற்சி பற்றிய அடிப்படை தெரியாதவர்களும், முறையாக செய்ய தெரியாதவர்களும், அடுத்தடுத்த பயிற்சிகளை செய்வதற்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. `புரோன் பிளாங்க்’ பயிற்சியைச் செய்து, நன்கு பழக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே, ஸ்பைடர்மேன் பிளாங்க் எளிதாக இருக்கும். பொதுவாகவே எந்த பயிற்சியையும், உடற்பயிற்சி நிபுணர்களின் பரிந்துரை இல்லாமல் நீண்ட நாட்களுக்கு தொடரக்கூடாது.