கொரோனா உருமாறி சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பரவி வருவதால் சோதனையை அதிகரித்துள்ளோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை வேளச்சேரியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நோய் பரவல் இல்லை என பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்த மத்திய குழு பாராட்டியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூபல்லா (தட்டம்மை தடுப்பூசி) போடப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடும்பத்திற்கு அரை கிலோ பிளீச்சிங் பவுடர் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா உருமாறி சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பரவி வருவதால் சோதனையை அதிகரித்துள்ளோம். கொரோனா உருமாறலால் இருமல், சளி பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. பாதிப்பு ஏற்பட்ட 3 நாட்களில் அவை சரியாகி விடுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா உருமாறி வருவதால் தமிழ்நாட்டில் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலை செல்வோருக்கு சோதனை செய்யும் அளவு பதற்றமான சூழல் இல்லை. இவ்வாறு கூறினார்.