விஷ்ணு பெருமாள் கோவில்களில் சிறப்பு மிகுந்த ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று தொடங்குகிறது.
திருவரங்கத்தில் (ஸ்ரீரங்கம்) அமைந்துள்ள ரெங்கநாதர் திருக்கோவில் பூலோக சுவர்க்கம் என வருணிக்கப்படுகிறது. இக்கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவும், சொர்க்க வாசல் திறப்பும் புகழ் வாய்ந்தவை.
இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி இன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முதல் நாள் உற்சவமான திருமொழி திருவிழா நாளை நடைபெறுகிறது. அன்று காலை 7.30 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தையும் பெருமாளுக்கு காலை 8 – 12 வரை நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் இசையுடன் பாடப்படுகிறது.
முதல் நாள் தொடங்கி 20 நாட்களுக்கு மூலவர் முத்தங்கி சேவையில் காட்சி தருகிறார். 22ம் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் காட்சி அளிப்பார். 23ம் தேதி ராப்பத்து உற்சவத்தின் ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் நம்பெருமாள் அதிகாலை 4 மணிக்கு பரமபத வாசல் எனும் சொர்க்க வாசலில் எழுந்தருள்வார்.
சொர்க்கவாசல் திறப்பு தரிசனத்தை மேற்கொள்பவர்கள் மறுமையில் நேரடியாக சொர்க்கத்தை அடைவார்கள் என்பது நம்பிக்கை. இதனால் சொர்க்க வாசல் திறப்பிற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.