சபரிமலை பக்தர்களுக்கு இன்று முதல் தரிசன நேரம் அதிகரிப்பு..!

by Editor News

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலகால, மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. தொடக்கத்தில் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்து வந்தது. கடந்த வாரத்திலிருந்து பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 90.000பக்தர்கள் வரை சபரிமலையில் தரிசனத்துக்காக சென்று வருகின்றனர். ஒரு நிமிடத்தில் 75 பேர் பதினெட்டாம் படி ஏறிச்செல்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அதிலும் முந்தைய நாள்களில் தரிசனம் செய்யாதவர்களும் மறுநாள் தரிசனம் செய்வதால், சன்னிதானத்தில் கூட்டம் அலை மோதுகிறது. இந்த நிலையில் சபரிமலை ஐயப்ப சாமி கோயிலில் கூட்டத்தை கையாளுவது குறித்து, கேரள மாநில உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு எடுத்தது. நடை திறக்கும் நேரத்தை அதிகரிக்க முடியுமா என தேவசம்போர்டிடம் கேட்டது.

சபரிமலையில் தரிசன நேரத்தை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தந்திரி தெரிவித்துவிட்டதாக, தேவசம்போர்டு உயர் நீதிமன்றத்தில் நேற்று பதிலளித்துள்ளது. இதையடுத்து, பக்தர்களின் நெரிசல்களை சமாளிப்பது குறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் ஏ.டி.ஜி.பி பதிலளிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும் வழக்கை திங்கள்கிழமைக்கு மாற்றி வைத்துள்ளது.

சபரிமலையில் 1,203 போலீஸார், 40 பேரிடர் மீட்புக் குழுவினர் பணியில் உள்ளதாக மாநில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 113 ரேபிட் ஆக்‌ஷன் ஃபோர்ஸினர் பணியில் உள்ளதாக மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கு மலை ஏறிச்சென்ற தமிழ்நாட்டின் சேலம், பாப்பநாயக்கம்பட்டியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகள் பத்மஸ்ரீ (10), அப்பாச்சிமேடு பகுதியில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். நேற்று மதியம் பம்பையிலிருந்து குழுவாகப் புறப்பட்டு மலை ஏறிச் சென்ற நிலையில் பத்மஸ்ரீ மயக்க நிலைக்குச் சென்றுள்ளார்.

அவருக்கு உடனடியாக முதலுதவிகள் வழங்கப்பட்டும் பலனளிக்காமல் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரின் உடல் பம்பா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். குழந்தைக்கு இதயம் சம்பந்தமான பிரச்னை இருந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதே சமயம் சபரிமலையில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ள நிலையில், நெரிசல் காரணமாக குழந்தை இறந்ததா என்பது பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சபரிமலை தந்திரி கண்டரரரு ராஜீவரு கூறுகையில், சபரிமலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டத்தை கணக்கில் எடுத்து கோவிலில் நடை திறப்பு நேரம் மேலும் அதிகரிப்பதை பற்றி தேவசம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment