கன்னட திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை லீலாவதி (வயது 87). இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் ஆவார்.
கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான 600 படங்களில் நடித்துள்ள லீலாவதி, கன்னடத்தில் மட்டும் 400 படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 1958ம் ஆண்டு கன்னட மொழியில் லீலாவதி நடிக்க தொடங்கினார்.
அதனைத்தொடர்ந்து, தமிழில் பட்டினத்தார் திரைப்படம் வாயிலாக 1962ம் ஆண்டு தனது அறிமுகத்தை ஏற்படுத்தினார். கன்னத்திரையுலகில் கொடிகட்டிப்பறந்த ராஜ்குமார், உதயகுமார், தெலுங்கில் என்.டி. ராமராவ், சிவாஜி கணேசன், கமல் ஹாசன், ஜெமினி கணேசன், ஆர்த்தி, ரஜினிகாந்த் உட்பட பலருடன் நடித்துள்ளார்.
2009ம் ஆண்டு வரை திரைத்துறையில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த லீலாவதி, அதன்பின் எப்படங்களிலும் நடிக்கவில்லை. இந்நிலையில், வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த லீலாவதி, கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், நெலமங்கலாவில் இருக்கும் தனது இல்லத்தில் இயற்கை எய்தினார்.
திரையுலகினர் பலரும் அவரின் ஆன்மா சாந்தியடைய தங்களின் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.