குளிர்காலத்தில் உதடுகளில் தோல் உரிவதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. குளிர்ச்சியான வெப்பநிலை, குறைவான ஈரப்பதம் மற்றும் அடிக்கடி நாக்கால் உதட்டை தேய்ப்பது போன்ற சிலவற்றை முக்கியமாக கூறலாம். இதன் காரணமாக உதட்டில் இயற்கையாக இருக்கும் எண்ணெய் பசை காய்ந்துவிடுகிறது. உங்கள் உதடு வெடிப்பை சரி செய்வதற்கான டிப்ஸ் இதோ…
நீர்ச்சத்து:
உங்கள் உடலின் ஒட்டுமொத்த நீர்ச்சத்தின் அளவு குறையாதளவிற்கு நிறைய தண்ணீர் பருகுங்கள். இது உதடு வறட்சியாவதை தடுக்கும். மேலும் உங்கள் வீட்டில் ஈரப்பதமூட்டியை பயன்படுத்துங்கள். இது அங்குள்ள காற்றில் ஈரப்பதத்தை அதிகரிக்க உதவும்.
தோல் உரித்தல்:
அடிக்கடி உதடுகளில் உள்ள தோல்களை உரித்தெடுங்கள். இது உதடுகள் வறட்சியாவதை தடுக்கும். சர்க்கரை மற்றும் தேன் சேர்த்து வீட்டிலேயே தயாரித்த உதட்டு ஸ்கரப்பை பயன்படுத்துங்கள். நிச்சயம் இது உங்களுக்கு நிவாரணமளிக்கும். குறிப்பாக உதட்டில் அதிகமாக தோலை உரித்துவிடாதீர்கள்.
உதட்டு தைலம் (லிப் பால்ம்):
நல்ல தரமான, உதடுகளை ஈரப்படுத்தும் தைலமாக பார்த்து வாங்குங்கள். தேன் மெழுகு, ஷியா வெண்ணெய் அல்லது கோகோ வெண்ணெய் போன்ற மூலப்பொருட்கள் கலந்துள்ள தைலமாக இருக்க வேண்டும். எப்போதும் இதை உங்கள் கைவசம் வைத்திருங்கள். வெளியே செல்லும் போது கூட இதை உதட்டில் தடவிக் கொள்ளலாம்.
உதட்டை நாக்கால் ஈரப்படுத்தாதீர்கள்:
நம் உதட்டை நாக்கால் எச்சில்படுத்தும் பழக்கம் அனைவருக்கும் இருக்கும். அவ்வளவு சீக்கிரத்தில் இந்தப் பழக்கத்தை மாற்ற முடியாது. ஆனால் இப்படி செய்வது உதட்டிற்கு கேடையே விளைவிக்கும். உதட்டில் படும் எச்சில் காய்ந்ததும், முன்பை விட அதிகமாக உதடுகள் வறண்டு போகின்றன. ஆகையால் நாக்கால் எச்சில் பன்னுவதற்குப் பதிலாக, குளிர் காற்று வீசும் சமயத்தில் துணியால் உங்கள் உதட்டை மூடிக் கொள்ளுங்கள்.
இவ்வளவுக்கு பிறகும் உதடுகளில் வெடிப்பு வந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.