தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கும் சொந்தக்காரியாக இருக்கிறார். நயன்தாராவுக்கு லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் கிடைக்க முக்கிய காரணம் அவர் நடிப்பில் கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் வரிசையாக ஹிட் ஆனதுதான். அப்படங்கள் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக வசூலையும் வாரிக்குவித்ததால் லேடி சூப்பர்ஸ்டார் என்கிற அந்தஸ்தை பெற்றார் நயன்.
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான விஜய், அஜித், ரஜினி போன்றவர்களின் படங்களில் நடித்தாலும், கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் நயன். அந்த வகையில் அவர் நடித்த திரைப்படம் தான் அன்னபூரணி. இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருக்கிறார். இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார்.
அன்னபூரணி திரைப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக ஜெய் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், பிக்பாஸ் பூர்ணிமா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும் பாக்ஸ் ஆபிஸில் அன்னபூரணி படம் நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது.
அன்னபூரணி திரைப்படம் முதல்நாளில் 60 லட்சமும், இரண்டாம் நாளில் 90 லட்சமும், மூன்றாம் நாளில் 87 லட்சமும் வசூலித்த நிலையில், நான்காம் நாளான நேற்று மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. இப்படம் நேற்று வெறும் ரூ.20 லட்சம் மட்டுமே வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசூல் சரிவுக்கு முக்கிய காரணம் சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளம் தான் என கூறப்படுகிறது. இந்த வெள்ளத்தால் பெரும்லாமான பகுதிகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் அன்னபூரணி படம் வசூலில் அடிவாங்கி இருக்கிறது.
சென்னையில் இன்னும் இயல்பு நிலை திரும்பாததால், இப்படத்தின் வசூல் இன்றும் கம்மியாகவே இருக்க வாய்ப்புள்ளது. இதே நிலை நீடித்தால் இப்படம் 5 கோடி தான் மொத்தமாக வசூலிக்கும் என கூறப்படுகிறது. இப்படத்திற்காக நடிகை நயன்தாரா வாங்கிய சம்பளமே ரூ.10 கோடி என்பதால் அந்த பணம் கூட வருமா என்பதே கேள்விக்குறியாக உள்ளதாம்.