என்ன தான் ஆரோக்கியம் கருதி நமது நாக்கை நாம் கட்டுப்படுத்தி வைத்தாலும், ஒரு சில சமயங்களில் அது கைமீறி சென்று விடலாம். சில உணவுகளை நம்மால் சாப்பிடாமல் இருக்க முடியாது. நாவை கட்டுப்படுத்த முடியாமல் ஆசைக்காக பொரித்த உணவுகளை சாப்பிட்டு விட்டு பிறகு நாம் தான் சிரமப்பட வேண்டி இருக்கும். பொரித்த உணவுகள் செரிமானத்தை மெதுவாக்கி, அசிடிட்டி, வயிற்று உப்புசம், வாயு தொல்லை போன்ற செரிமான கோளாறுகளை உண்டாக்கலாம். இதை நாம் கவனிக்காமல் விட்டு விடுவது தீவிரமான பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். என்றாவது ஒருநாள் பொரித்த உணவுகளை சாப்பிடுவதால் தவறு ஒன்றும் இல்லை.
அந்த வகையில் ஒரு வேலை நீங்கள் எண்ணெய் அதிகமாக சேர்க்கப்பட்ட உணவை சாப்பிட நேர்ந்தால், அதனால் ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகளை தவிர்ப்பதற்கு நீங்கள் ஒரு சில பழக்கங்களை பின்பற்றுவது உதவக்கூடும். அவ்வாறான சில பழக்கங்கள் என்ன என்பதை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.
வெதுவெதுப்பான தண்ணீர் பருகவும் :
எண்ணெய் சேர்த்து சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்ட பிறகு வெதுவெதுப்பான தண்ணீரை பருகுவது நல்ல பழக்கம். இது எண்ணெய் மிகுந்த உணவை சிறு சிறு துகள்களாக உடைப்பதன் மூலமாக செரிமானத்தை விரைவுப்படுத்துகிறது. இதனால் செரிமான அசௌகரிங்கள் ஏற்படுவதில் இருந்து நீங்கள் விடுதலை விடுபடலாம்.
கிரீன் டீ பருகவும் :
எண்ணெய் மிகுந்த உணவு சாப்பிட்ட பிறகு உங்களது வழக்கத்தில் கிரீன் டீயை சேர்த்துக் கொள்ளுங்கள். ஃபிளவனாய்டுகள் நிறைந்த கிரீன் டீ செரிமான அமைப்பில் ஆக்சிடேட்டிவ் அழுத்தம் ஏற்படுவதை தடுக்கிறது.
ப்ரோபயோடிக் உணவுகளை சாப்பிடவும் : ஆயுர்வேதத்தின் படி, ப்ரோபயாடிக் நிறைந்த உணவுகளான தயிர், குறிப்பாக அவற்றை வறுத்த சீரகம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடுவது நமது செரிமான அமைப்பிற்கு பலவிதமான பலன்களை தரும். இந்த உணவுகளில் நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்திருப்பதால் இவை அசிடிட்டி பிரச்சினையை தடுப்பதற்கு திறம்பட செயல்படுகிறது.
உணவு உண்ட உடன் உடனடியாக தூங்குவதை தவிர்க்கவும் :
எந்தவிதமான உணவு சாப்பிட்டாலும் சரி, உணவு உண்ட உடனையே தூங்குவது தவறு. அதிலும் எண்ணெய் மிகுந்த உணவு சாப்பிட்ட பிறகு தூங்குவதை தவிர்த்து விடுங்கள். ஒருவேளை நீங்கள் உணவு உண்ட பிறகு தூங்கினால் கொழுப்பு உடலில் படிந்து, அதனால் பல்வேறு விதமான உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம்.
குளிர்ந்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவும் ஐஸ்கிரீம், ஜூஸ் போன்ற குளிர்ந்த உணவுகளை எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகள் சாப்பிட்ட பிறகு தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இந்த உணவுகள் செரிமான அமைப்பில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தி உங்களுக்கு அசௌகரியத்தை அளிக்கலாம்.
எனவே, எண்ணெய் மிகுந்த பொரித்த உணவுகளை சாப்பிட்ட பிறகு செரிமான பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு மேலே சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை நீங்கள் பின்பற்றலாம். ஆனால் அதன் பிறகும் உங்களுக்கு அசௌகரிங்கள் ஏற்படும் பட்சத்தில் நீங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.