நேற்று முன்தினம் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 30-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவடையும். வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து ஒரு சூறாவளியாக மாற வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மதியம் ஒரு மணி வரை திருவள்ளூர் ,செங்கல்பட்டு ,காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் ராணிப்பேட்டை, விழுப்புரம் ,கடலூர் ,மயிலாடுதுறை ,திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.