காரைக்குடி செட்டிநாட்டு சமையல் என்றாலே பலருக்கு நா ஊறும். அந்த அளவிற்கு ஒரு தனித்துவமான சமையல் கலையை கொண்ட பகுதியாக உள்ளது. இங்கு பிரபலமான பல உணவு வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் பருப்பு உருண்டை குழம்பு.
இந்த பருப்பு உருண்டை குழம்பை மக்கள் பொதுவாக இரண்டு விதமாக செய்கிறார்கள். உருண்டைகளை பிடித்து குழம்பு கொதிக்கும் போது அதில் போட்டு மூடி வைத்து வேக வைக்கிறார்கள். அல்லது பருப்பு உருண்டைகளை வேக வைத்து அதன் பின்னர் குழம்புடன் சேர்த்துக் கொள்கிறார்கள்.
தேவையான பொருட்கள்
உருண்டைக்கு
துவரம் பருப்பு – 3/4 கப்
கடலை பருப்பு – 1/4 கப்
சோம்பு – 1டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
சின்ன வெங்காயம் – 10 – 12
கொத்த மல்லி இலைகள்
குழம்பிற்கு
சமையல் எண்ணெய்
கடுகு
சீரகம் அல்லது சோம்பு – 1/2 டீ ஸ்பூன்
பூண்டு – 5
சின்ன வெங்காயம் – 15
மஞ்சள் தூள் – 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன்
மல்லி தூள் – 3 டீ ஸ்பூன்
தக்காளி – 1
புளிக்கரைசல்
செய்முறை
குழம்பு செய்ய துவங்குவதற்கு முன்னதாக துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பை சுமார் ஒரு மணி நேரத்திற்கு நன்றாக ஊற வைக்கவும். பிறகு அவற்றில் உள்ள தண்ணீரை வடிகட்டவிடவும்.
இப்போது ஒரு மிக்சி எடுத்து அதில் முன்னர் ஊற வைத்துள்ள துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பை சேர்க்கவும். அவற்றோடு சோம்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து மிருதுவாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
தனியாக ஒரு பாத்திரம் எடுத்து, அதில் அரைத்தவற்றை கொட்டவும். பிறகு அவற்றோடு பொடிப்பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும். பின்னர் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பிறகு அவற்றை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்துக்கொள்ளவும். கடையில் ஒரு உருண்டைக்கான மாவை மட்டும் வைத்துக்கொள்ளாவோம். அதை குழம்போடு இறுதியாக சேர்க்கும்போது குழம்பு இன்னும் சுவை கூடும்.
இப்போது நாம் பிடித்து வைத்துள்ள இந்த உருண்டைகளை ஒரு சிறிய இட்லி தட்டில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைத்துக்கொள்ளலாம். அல்லது நேரடியாக குழம்பில் சேர்த்து கொள்ளலாம்.
இப்போது, குழம்பு செய்ய ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சோம்பு அல்லது சீரகம், பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
பிறகு அவற்றோடு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கிய பிறகு கரைத்து வைத்துள்ள புளியை சேர்க்கவும். அதோடு முன்பு ஒதுக்கி வைத்த உருண்டையையும் சேர்த்து கொள்ளவும். இவற்றை ஒரு முறை நன்கு கிளறிய பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
இந்த குழம்பு கொதிக்கும் போதே தேங்காய் பால் தயார் செய்து அவற்றுடன் சேர்த்துக்கொள்ளலாம். இவை நன்கு ஓரளவு கொதித்த பிறகு முன்னர் பிடித்து வைத்துள்ள உருண்டைகளையும், சில கருவேப்பிலைகளையும் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க வைத்து கீழே இறக்கவும்.
இப்போது தயாராக உள்ள இந்த உருண்டைக் குழம்பை உங்களுடைய உணவுகளுடன் சேர்த்து பரிமாறி ருசிக்கலாம்.