தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று (27-11-2023) காலை 0830 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று (28-11-2023) காலை 0830 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 30-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும். தென்இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது . தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.