கொலஸ்ட்ரால் என்றாலே நம் உடலுக்கு தீங்கு தரக்கூடிய ஒரு பொருள் என்ற நம்பிக்கை பலரிடத்தில் உண்டு. உண்மையில் கொலஸ்ட்ரால் என்பது பல்வேறு உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஒரு கொழுப்பு நிறைந்த பொருள். எனினும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகும் போது தான் நமக்கு பிரச்சனை எழுகிறது. அதிலும் குறிப்பாக LDL கொலஸ்ட்ரால் என்ற கெட்ட கொழுப்பு இதய நோய் உருவாவதற்கான அபாயத்தை ஏற்படுத்துகிறது. கொலஸ்ட்ரால் அளவுகளை குறைப்பதற்கு ஈஸியான, இயற்கையான வழிகள் இருந்தால் சொல்லுங்களேன் என்பது பலரது கேள்வியாக உள்ளது. இந்த பதிவில் அதற்கான பதில்கள் சிலவற்றை காணலாம்.
பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடும் பொழுது நமது கொலஸ்ட்ரால் இயற்கையாகவே குறையும். மேலும் அவகாடோ, நட்ஸ், ஆலிவ் எண்ணெய் போன்ற இதயத்திற்கு ஆரோக்கியமாக கருதப்படும் கொழுப்புகள் நிறைந்த உணவுகளையும் அவ்வப்போது நாம் சாப்பிட வேண்டும். இது தவிர வழக்கமான முறையில் உடற்பயிற்சி செய்வது மற்றும் நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது போன்றவை செய்வதன் மூலமாக நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கலாம். ஒரு சில பானங்களை வெறும் வயிற்றில் பருகும் பொழுது உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்து நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்.
இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு தண்ணீர் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைப்பதற்கு உதவும். இஞ்சியில் காணப்படும் ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகள் கொலஸ்ட்ரால் அளவுகளை பராமரிக்கிறது.
மஞ்சள் பால் :
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பருகி வர கூடிய விரைவில் கொலஸ்ட்ரால் அளவுகள் கட்டுப்படுத்தப்படும்.
தேன் மற்றும் பூண்டு தண்ணீர் :
மூன்று பல் பூண்டை தோலுரித்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் இந்த பூண்டு விழுது மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்தால் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையிலிருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.
நெல்லிக்காய் சாறு :
நெல்லிக்காய் சாறு வைட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்களுக்கு பெயர் போனது. இதனை காலை வெறும் வயிற்றில் குடிக்கும் பொழுது கொலஸ்ட்ரால் அளவுகள் குறைக்கப்படுவது மட்டுமல்லாமல் நமது இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
கிரீன் டீ :
கிரீன் டீயில் காணப்படும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் கேட்டசீன்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நமது உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. எனவே நீங்கள் வழக்கமாக பருகும் டீக்கு பதிலாக கிரீன் டீயை பழக்கமாக்கி கொள்ளுங்கள்.