சீனாவில் புதியவகை நிமோனியா காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.
சீனாவில் கொரோனா பேரிடருக்குப் பிறகு தற்போது மர்ம காய்ச்சல் மிக வேகமாக பரவிவருகிறது. பீஜிங், லியானிங் மாகாணங்களில் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மூச்சி திணறல் அறிகுறிகளுடன் அங்குள்ள மருத்துவமனைகளில் நிரம்பி வருவதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நோய் குறித்த கூடுதல் விவரங்களையும் பாதிப்பு எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களையும் சீனாவிடம் உலக சுகாதார அமைப்பு கேட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை விரைவாக நீக்கியதே இந்த காய்ச்சலுக்கு காரணம் என கூறப்படுகிறது. ‘வாக்கிங் நிமோனியா’ என அழைக்கப்படும் மைக்கோப்ளாஸ்மா நிமோனியா இந்த காய்ச்சலுக்கு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர்.\
இந்நிலையில் சீனாவில் குழந்தைகளிடையே மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில், பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்யும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதி எழுதியுள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மற்றும் நோய் தடுப்பு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இன்று காணொளி காட்சி வாயிலாக அவசர ஆலோசனை மேற்கொண்டனர். புளூ காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சனை ஆகியவற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் கண்டறிந்து அவ்வப்போது வழங்கப்பட்டுள்ள சிகிச்சை குறித்தும் இணையதளத்தில் தினசரி பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.