நம் வீடுகளில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தான் என்ற அகந்தையுடன் இருப்பவர்களால் இறைவனை அடைய முடியாது, இறைவன் ஜோதி வடிவானவன். அனைத்து உயிர்களுக்குள்ளும் இறைவன் நிறைந்திருக்கிறான் என்பதை உலகிற்கு சிவ பெருமான் உணர்த்திய தினமே கார்த்திக் தீபத் திருநாள்.
அடி முடி காணா சிவனே என்ற சொல்லுக்கு வலுசேர்க்கும் விதமாக, சிவனின் அடி, முடியை காண புறப்பட்டு, தோற்றுப் போன பிரம்மனுக்கும், விஷ்ணுவிற்கும், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் சிவ பெருமான் ஜோதி வடிவாக காட்சி கொடுத்த தினத்தை தான் நாம் திருக்கார்த்திகை தீபத்திருநாளாக கொண்டாடுகிறோம்.
திருவண்ணாமலையில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதை தரிசித்து விட்டு, 6.05 மணிக்கு மேல் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும். குறைந்தபட்சமாக 27 விளக்குகள் ஏற்ற வேண்டும். அதிகபட்சமாக 50, 100 என எத்தனை விளக்குகள் வேண்டுமானாலும் ஏற்றலாம்.
முதலில் வாசலில் கோலத்தின் நடுவில் விளக்கு ஏற்ற வேண்டும். வாசல், நிலைவாசலில் தீபம் ஏற்றிய பிறகு வெளியில் ஏற்றிய ஒரு தீபத்தை எடுத்து வந்து வீட்டிற்குள் பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். அதற்கு பிறகு வீட்டின் சமையல் அறை, படுக்கை அறை, கழிவறை, கூடம் என அனைத்து இடங்களிலும் எத்தனை விளக்குகள் ஏற்ற முடியுமோ அத்தனை விளக்குகள் ஏற்றலாம்.
நல்லெண்ணெய், ஐந்து வகை எண்ணெய்களையும் பயன்படுத்தி விளக்கேற்றலாம். குறைந்த பட்சம் ஒரு விளக்காவது நெய் தீபம் ஏற்ற வேண்டும். வாசலில் ஏற்றப்பட்ட தீபம் 30 நிமிடங்கள் எரிந்தால் கூட போதுமானது. பிறகு எடுத்து விடலாம். வீட்டின் பிற இடங்களில் ஏற்றிய தீபத்தில் அடிக்கடி எண்ணெய் விடவோ, திரியை தூண்டி விடவோ வேண்டிய அவசியம் இல்லை. அந்த தீபங்கள் தானாக குளிரும் வரை அப்படியே விட்டு விடலாம்.