பொதுவாக அண்டை நாடுகள் என்றால் எல்லை பிரச்சினைகள் இருக்கும் என்ற வகையில் ஒவ்வொரு நாட்டுடனும் சில உரசல், மோதல் இருக்கத்தான் செய்யும். சீனாவுடனும் நமக்கு இதுபோன்ற எல்லைப் பிரச்சினைகள் சில உண்டு என்றாலும், அதையெல்லாம் தாண்டி, அங்கிருந்து அவ்வபோது பரவக் கூடிய உயிர்கொல்லி நோய்கள் தான் பேராபத்து கொண்டதாக உள்ளன.
அதிலும் கொரோனா என்ற வார்த்தையை நாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கி, ஏறக்குறைய இரண்டு ஆண்டு காலம் ஒட்டுமொத்த உலகையும் முடக்கிப் போட்டது இந்த கொரோனா.
கொரோனா என்ற வைரஸை உருவாக்கியதே சீனா தான் என்றொரு விவாதம் ஒருபுறம் ஓடிக் கொண்டிருக்க, ஆனால், அந்நாடு அதை மறுத்து வந்தது. ஆனால், சீனாவில் இருந்து தான் ஒட்டுமொத்த உலகுக்கும் அந்த கொடிய நோய் பரவியது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
எண்ணற்ற உயிரிழப்புகள், தீவிரமான உடல்நல பாதிப்புகள், பொருளாதார இழப்புகள் என்று பெரும் துயர் நிலையில் இருந்து, தடுப்பூசி மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளின் மூலமாக உலக நாடுகள் மீண்டு வந்து இப்போதுதான் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றன.
புதிதாக பரவும் நிமோனியா காய்ச்சல் :
இப்படியொரு சூழலில், மீண்டும் மிகப்பெரும் நோய்க்கான தொற்று மையமாக சீனா உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள மாகாணங்களில் நிமோனியா காய்ச்சல் பரவுகிறதாம். அதிலும் குழந்தைகளைத்தான் அதிகம் பாதிக்கிறதாம்.
கடந்த ஒரு வாரத்தில் இந்த நிமோனியா பாதிப்புகள் குறித்து வெளியான பல செய்திகளை மையமாக வைத்து சீனாவிடம் உலக சுகாதார ஆய்வு நிறுவனம் அறிக்கை கேட்டுள்ளது. கடந்த 13ஆம் தேதி சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, “சீனாவில் மூச்சுத்திணறல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருகின்றன’’ என்று குறிப்பிட்டதாக உலக சுகாதார ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.
அறிகுறிகள்
காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் நிமோனியா காய்ச்சல் தென்படுமாம். இதில் எண்ணற்ற மக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களுக்கு அறிவுறுத்தல்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் முன் தடுப்பு நடவடிக்கைகளை கையாள வேண்டும் என்று உலக சுகாதார ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. சுகாதாரத்தை பேண வேண்டும் என்றும், மூச்சுப் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.