பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த 17-ம் தேதி திருக்கார்த்திகை தீப திருவிழா கொடியோற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது.
திருக்கார்த்திகை தீப திருவிழாவின் 7ம் நாளான இன்று பஞ்ச மூர்த்திகளின் மகா ரத தேரோட்டம் காலை 8 மணியளவில் விநாயகர் தேரானது பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு மாட வீதியில் வலம் வந்து நிலையை அடைந்த பின்பு முருகர் தேரானது வடம் பிடித்து இழுக்கப்பட்டு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து நிலையை அடைந்தது. அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகின்ற மகா ரத தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. தமிழக சட்டபேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரை ஆகியோர் வடம் பிடித்து தேரினை இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அண்ணாமலைக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு அண்ணாமலையார் தேரை வடம் பிடித்து இழுத்து மாட வீதிகளில் வலம் வந்தனர்.
திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்டு அண்ணாமலையாரை தரிசித்தனர். மகா ரதம் என்று அழைக்கக்கூடிய பெரிய தேர் 300 டன் எடை கொண்டது. இந்த தேர் 62 அடி உயரம் கொண்டது.மகா ரத தேர் திருவிழாவினையொட்டி பக்தர்களின் பாதுகாப்பிற்காக 4000 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அண்ணாமலையார் தேர் மாடவீதியில் வலம் வந்து நிலையை அடைந்தது. பெண்களால் வடம் பிடித்து இழுக்க கூடிய அம்மன் தேரோட்டம் நடைபெறும். இதில் 500க்கும் மேற்பட்ட மகளிர் போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
இதனைத் தொடர்ந்து சிறுவர்களால் வடம் பிடித்து இருக்கக்கூடிய சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறும் வருகின்ற 26ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோவிலின் கருவறையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை மீது மகா தீபமும் ஏற்றபட உள்ளது. இந்த மகா தீப தரிசனத்தை காண 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.