ஏகாதசி நாட்களில் விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்..!!

by Editor News

ஒவ்வொரு ஆண்டும் வளர்பிறை, தேய்பிறை காலங்களை கணக்கிட்டு மொத்தம் 25 ஏகாதசிகள் நிகழ்கின்றன. இதில் ஒவ்வொரு மாத ஏகாதசியும் ஒவ்வொரு பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி நாட்களில் விரதம் இருப்பதால் நவகிரகங்களின் கொடும் ரேகைகள் நம்மிலிருந்து விலகி பூரணை அருளை தரும்.

இந்த ஏகாதசிகளில் கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி கைசிக ஏகாதசி எனப்படுகிறது. இது பிரபோதின ஏகாதசி என்றும் வழங்கப்படும். முருக பெருமானுக்கு உகந்த கார்த்திகை மாதத்தில் வரும் இந்த ஏகாதசி நாராயணரின் அருளையும் பாலிக்கிறது.

கைசிகம் என்பது ஒரு வகை பண் ஆகும். வராக அவதாரமெடுத்து பெருமான் பூமாதேவிக்கு இந்த பண்ணை அருளியதாக வராக புராணம் குறிப்பிடுகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக கார்த்திகையில் வரும் இந்த கைசிக ஏகாதசி பாணர் குல கைசிக பண் இசையில் பாடப்பட்டதால் கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுவதாக புராணங்கள் சொல்கின்றன.

இந்த ஏகாதசி நாளில் விரதமிருப்போரை தேவர்களும், நாகர்களும் போற்றுவர். அன்றைய தினம் விரதம் இருந்து விஷ்ணு சஹஸ்ஹரநாமம் படிப்பவர்களுக்கு ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கி நற்பலன் கிடைக்கும். கைசிக ஏகாதசி விரதமிருப்போருக்கு புராணங்களில் சொல்லப்பட்ட 21 தானங்களை செய்தவர்களுக்கு நிகரான பலன் கிடைக்கும்.

ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி திருநீர் அணிந்து தெய்வங்களை பூஜிக்க வேண்டும். விரத தினத்தில் துளசி இலைகளை பறிக்க கூடாது. முதல்நாளே பறித்து வைத்திருத்தல் நலம். அன்றைய தினம் துளசி தீர்த்தம் மட்டுமே கொண்டு விரதம் மேற்கொள்ளலாம் அல்லது பழ நிவேதனம் செய்து கொள்ளலாம். கண்டிப்பாக பகல் பொழுதில் தூங்க கூடாது. இரவில் பஜனை பாடுவதோ அல்லது விஷ்ணு பெருமான் குறித்த பாசுரங்களை படிக்கலாம். இவ்வாறு ஏகாதசி விரதம் இருப்பவர்கள் வீட்டில் நலமும், வளமும், செல்வமும் சேரும்.

Related Posts

Leave a Comment