மஸ்ரூம் பிரியாணி..!!

by Editor News

தேவையான பொருட்கள்:

காளான் – 1/2 கிலோ
பாஸ்மதி அரிசி – 2 கப்,
தக்காளி – 3,
வெங்காயம் – 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 11/2 ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 4,
தேங்காய் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்,
தயிர் – 1/4 கப்,
மிளகாய்த்தூள் – 11/2 டீஸ்பூன்,
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்,
புதினா -1 கைப்பிடி,
கொத்தமல்லி -1 கைப்பிடி,
பிரியாணி இலை,
லவங்கம், ஏலக்காய், கிராம்பு – தலா 2
உப்பு -1/2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

இந்த பிரியாணி செய்வதற்கு முதலில் அரிசியை நன்றாக சுத்தம் செய்து பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் காளானை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் நீளவாக்கில் நறுக்கி வைத்து விடுங்கள்.

இப்போது பிரியாணி தாளித்து விடலாம். அதற்கு அடுப்பில் குக்கர் வைத்து நெய், எண்ணெய் ஊற்றி சூடான பிறகு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதங்க வேண்டும். இதில் வெங்காயம் வதக்கும் முறை மிகவும் முக்கியம். அதன் பிறகு பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை போன பிறகு தக்காளி மஞ்சள் தூள் சேர்த்து குழைய வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு மிளகாய் தூள், மல்லித்தூள் என அனைத்தையும் சேர்த்து வதக்கிய பின் இதன் பச்சை வாடை போன பிறகு புதினா, கொத்தமல்லி இலை இரண்டையும் சேர்த்து வதக்கி விடுங்கள்.

கடைசியாக சுத்தம் செய்து வைத்த காளான், தயிர், உப்பு சேர்த்து நன்றாக கலந்த பிறகு மூன்று கப் தண்ணீரை ஊற்றி கொதிக்கும் வரை காத்திருங்கள். அதன் பிறகு ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து விட்டு அதையும் சேர்த்த பிறகு லேசாக கொதி வரும் நிலையில் குக்கரை மூடி இரண்டு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள்.

குக்கர் விசில் முழுவதுமாக இறங்கிய பிறகு குக்கரின் மூடியை திறந்து மேலே ஒரே ஒரு ஸ்பூன் மட்டும் நெய்யை ஊற்றி கலந்து பிரியாணியை தயிர் பச்சடியுடன் பரிமாறுங்கள் சுவை அட்டகாசமாக இருக்கும்.

Related Posts

Leave a Comment