ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை (ICC World Cup 2023) இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நவம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. இந்த போட்டிக்காக உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இறுதிப்போட்டி நடைபெறுவதால், கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
நரேந்திர மோடி மைதானத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் வரை அமரலாம். முழு மைதானமும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிபோட்டியை பார்க்க பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை ஆர்வமாக உள்ளனர். இறுதிப்போட்டியை மைதானத்தில் நேரில் பார்க்கலாம் என ஆர்வமாக இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி காத்ததுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியின் காரணமாக நகரின் பல முன்னணி ஹோட்டல்கள் தங்கள் கட்டணங்களை இரட்டிப்பாக்கியுள்ளன. ஓர் அறையின் வாடகை ஒன்றே கால் லட்சம் ரூபாயை எட்டியுள்ளது. சில 5 ஸ்டார் ஹோட்டல்களில் 2 லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது.
சமீபத்திய அறிக்கைகளின்படி, பல ஹோட்டல்கள் ஏற்கனவே முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், சில சொகுசு ஹோட்டல்கள் நவம்பர் 18 முதல் முன்பதிவை நிறுத்திவிட்டன. தற்போது அகமதாபாத் நகரில் அடிப்படை ஹோட்டல் அறையின் விலை ஒரு இரவுக்கு ரூ.10 ஆயிரம். மேலும், நான்கு மற்றும் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் அறையை வாடகைக்கு எடுக்க வேண்டுமானால், ஒரு இரவுக்கு ரூ.1 லட்சம் வரை செலுத்த வேண்டும்.
இதேபோல, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து அகமதாபாத்துக்கு இயக்கப்படும் விமானங்களின் கட்டணங்களும் உயர பறந்துள்ளன. கொல்கத்தாவிலிருந்து அகமதாபாத்திற்கு ரூ.40000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சாதாரண நாட்களில் டெல்லியில் இருந்து அகமதாபாத் செல்ல ஒரு வழி விமான கட்டணம் ரூ.3500 ஆக இருந்தது ஆனால் நவம்பர் 18 அன்று விமான டிக்கெட்டின் விலை ரூ.23000 ஆக உயர்ந்தது. மும்பையில் இருந்து அகமதாபாத் செல்ல விமான கட்டணம் ரூ.3500ல் இருந்து ரூ.28000 ஆக உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் இருந்து அகமதாபாத் செல்ல ஒரு வழி கட்டணம் ரூ.7000ல் இருந்து ரூ.36000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் இருந்து அகமதாபாத்திற்கு 5000 முதல் 24000 ரூ. அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.