தீபாவளி பண்டிகை நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் 364 இடங்களில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீவிபத்தில் சிக்கி 669 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தீபாவளி நாளன்று தமிழகம் முழுவதும் 364 இடங்களில் தீவிபத்துகள் ஏற்பட்டுள்ளதாக அழைப்புகள் வந்ததாக தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தீபாவளி நாளில் பட்டாசுகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக 254 அழைப்புகள் வந்துள்ளதாகவும், பட்டாசு அல்லாத தீவிபத்து 110 இடங்களில் நடைபெற்றிருப்பதாகவும் தீயணைப்பு துறை தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் மட்டும் பட்டாசுகள் வெடித்து 102 இடங்களில் விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், 9 இடங்களில் பட்டாசு அல்லாத தீவிபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி நாளன்று பட்டாசினால் ஏற்பட்ட தீவிபத்தில் 47 பேர் உள் நோயாளிகளாகவும், 622 பேர் புற நோயாளிகளாகவும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்ததால் தீவிபத்து ஏற்பட்டவுடன் உடனடியாக சென்று தீயை அணைத்ததால், தீவிபத்தில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.