கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை சற்று தணிந்ததை தொடர்ந்து முக்கிய சுற்றுலாதலமான திற்பரப்பு அருவியில் குளிக்க 6 நாட்களுக்கு பிறகு சுற்றுலாபயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்துவந்தது. இதனால் கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாதலமான திற்பரப்பு அருவியில் அதிகளவில் தண்ணீர் கொட்டியதால் சுற்றுலாபயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு கடந்த 5ஆம் தேதி முதல் பேரூராட்சி நிர்வாகம் தடைவித்திருந்தது.
இந்தநிலையில் நேற்றுமுதல் மாவட்டத்தில் பெய்துவந்த மழை சற்று தணிந்ததையடுத்து கோதையாற்றில் நீர்மட்டமும் சற்று குறைந்துள்ளது. இதனையடுத்து திற்பரப்பு அருவியின் ஒரு பகுதியில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு இன்று முதல் அனுமதியளிக்கபட்டுள்ளது. இதனால் தீபாவளி விடுமுறையை கொணடாட திற்பரப்பு அருவிக்கு வந்த சுற்றுலாபயணிகள் குடும்பத்துடன் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.