தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்னையில் இருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்றனர்.
சென்னையில் இருந்து நேற்று சொந்த ஊருக்கு செல்ல வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன், 1,895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை முதலே அதிக அளவிலான பொதுமக்கள் சென்னை கோயம்பேடுக்கு வருகை தந்து தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். எந்த வித சிரமமும் இன்றி பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு கிளம்பி சென்றனர். கடந்த சில ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு தமிழக அரசு சிறப்பான முன்னேற்பாடுகளை மேற்கொண்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதேபோல் சென்னை ஆம்னி பேருந்து நிலையத்திலும் அதிக அளவிலான பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு கிளம்பி சென்றனர். அரசு பேருந்துகளை காட்டிலும் கட்டணம் கூடுதலாக இருந்தாலும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆம்னி பேருந்து பயணம் செய்வதாக தெரிவித்தனர். தீபாவளி பண்டிகையை கொண்டாட ஒரே நேரத்தில் ஏராளமான பொது மக்கள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூடியதால் திருவிழா போல அங்கு காட்சி அளித்தது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி 3 லட்சத்து 66 ஆயிரத்து 80 பேர் கடந்த 2 நாட்களாக சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாகவும், வரும் நாட்களில் பயணம் செய்ய 2 லட்சத்து 38 ஆயிரத்து 598 பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும் போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான பேருந்துகளுடன் சேர்த்து இரண்டு நாட்களில் 6,656 பேருந்துகள் பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டுள்ளன.