சூப்பர்ஸ்டார் சர்ச்சை கடந்த சில மாதங்களாக கொளுந்துவிட்டு எரிந்த நிலையில், லியோ சக்சஸ் மீட்டில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் விஜய்.
ஜினிகாந்தின் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவிற்கு பின் சூப்பர்ஸ்டார் சர்ச்சை கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக மாறியது. விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என சோசியல் மீடியாவில் ரசிகர்கள் சண்டைபோட, எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் விதமாக ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் கலாநிதி மாறனின் பேச்சு அமைந்தது. ரஜினி தான் என்றைக்குமே சூப்பர்ஸ்டார் என்று பேசிய அவர், அவருக்கு போட்டி தளபதி விஜய் என்று குறிப்பிட்டதோடு, 72 வயசுல ரஜினி மாதிரி உங்களுக்கும் பட வாய்ப்பு வழங்க தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்னா அப்போ தான் நீங்க சூப்பர்ஸ்டார் ஆக முடியும் என பேசினார்.
ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ஹுகூம் பாடலில் ‘பேர தூக்க நாலு பேரு, பட்டத்தை பறிக்க நூறு பேரு’ என்கிற வரிகளும் விஜய்யை மறைமுகமாக தாக்கும் விதமாக அமைந்திருந்தன. இதனால் விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் சோசியல் மீடியாவில் வார்த்தை மோதல்கள் நடந்துவந்தன. இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் விஜய் பேசினால் தான் முடிவு வரும் என கூறப்பட்டு, அவர் லியோ ஆடியோ லாஞ்சில் இதுபற்றி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
நமக்கு கொடுத்திருக்கிற நட்சத்திர நாயகர்கள் என குறிப்பிட்டு பேசிய விஜய், புரட்சி தலைவர்னா ஒருத்தர் தான், கேப்டன்னா ஒருத்தர் தான், நடிகர் திலகம்னா ஒருத்தர்தான், உலகநாயகன்னா ஒருத்தர் தான், சூப்பர்ஸ்டார்னா அவர் ஒருத்தர் தான், தல-னா அது அவர் மட்டும் தான் என கூறிவிட்டு இறுதியாக மன்னர்களான உங்களுக்கு கீழ் இருக்கும் தளபதி நான் என விஜய் சொன்னதும் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். நீங்கள் ஆணையிட்டால் நான் செய்கிறேன் என விஜய் பேசியது வைரலாகி வருகிறது.