துளசி தோன்றியதன் புராண கதை ..

by Editor News

துளசிக்கு கார்த்திகை மாதம் சுக்ல துவாதசி அன்று எத்தனையோ காலத்திற்கு முன்பு நடந்தது அந்த தெய்வீக திருமணம். தீபாவளிக்கு பிறகு ஒரு 15 நாள் துளசி பூஜை என்று கொண்டாடுகிறார்கள். அந்த பூஜையில் துளசிக்கட்டை தான் மணமகள். நெல்லி மரத்தை துளசிச் செடிக்கருகே நடுவார்கள். கல்யாணத்திற்கு முன்பே முதல் நாள் சாயங்காலம் இப்போதெல்லாம் மணமக்களை வாழ்த்தி வரவேற்பு அளிப்பது போல கல்யாணத்திற்கு முதல் நாள் விஷ்ணுவும், துளசி என்கிற லக்ஷ்மியும் பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்திருப்பார்கள். லக்ஷ்மியை துளசியாகவும், கிருஷ்ணனை விஷ்ணுவாகவும் திருமண மக்களாக பாவிப்பது ஐதிகம்.

துளசி என்றால் ‘தன்னிகரில்லாதவள்’ என்று அர்த்தமாகும். துளசி என்பது ஒரு வகை செடியின் இலையாகும். இதை துள + சி என்பார்கள். இதற்கு ‘ஒப்பில்லாத செடி’ என்று பொருள். மகாலட்சுமியின் சொரூபமான துளசி, எப்போதும் திருமாலின் மார்பை அலங்கரிக்கும் சிறப்புப் பெற்றது. இதன் மூலம் மகாவிஷ்ணு எப்போதும் துளசியில் வாசம் செய்வதாக சொல்கிறார்கள்.

மூவுலகங்களிலும் எத்தனையோ மலர்கள், இலைகள் பூஜைக்கு பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் துளசி மட்டுமே மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புடைய துளசி தோன்றியதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.

துளசியின் புராண கதை :

மநு வம்சத்தை சேர்ந்த தர்மவத்வசன் எனும் அரசனின் மனைவி மாதவி கர்ப்பம் தரித்து அழகான ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். ஒப்பில்லாத அழகுடன் திகழ்ந்தால் அந்த குழந்தைக்கு துளசி என்று பெயரிட்டனர். அந்த குழந்தை வளர்ந்து பெரியவள் ஆனவதும் நாராயணனை திருமணம் செய்ய வேண்டும் என்று தவம் செய்தாள். பிரம்மன் அவள் முன் தோன்றி, பூமியில் நீ துளசி விருட்சமாக பிறந்து கிருஷ்ணரை திருமணம் செய்து கொள்வாய்’ என்ற வரம் கொடுத்தார்.

அதன்படி துளசியை விஷ்ணு மணந்து வைகுண்டம் அழைத்து சென்றார். எத்தனையோ லீலைகளை நடத்திக் காட்டிய கண்ணன், துளசியின் சிறப்பையும் ஒரு லீலை மூலம் உலகறிய செய்தார்.ஒரு தடவை கண்ணன் மீது அதிக அன்பு வைத்திருப்பவர் யார் என்று சத்தியபாமாவுக்கும் ருக்மணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

அதை உறுதிபடுத்த கண்ணன் தராசில் ஒரு பக்கம் அமர்ந்து கொள்ள, மறுபக்க தராசில் சத்தியபாமா பொன்னும் மணியுமாக குவித்தார். தராசு சமநிலைக்கு வரவில்லை. அடுத்து வந்த ருக்மணி, ஒரு சிறு துளசியை எடுத்து தராசு தட்டில் வைக்க, தராசு சமநிலைக்கு வந்தது. துளசியின் பெருமையை சொல்ல இந்த ஒரு புராண நிகழ்வே போதுமானதாகும்.

Related Posts

Leave a Comment