நியூசிலாந்திற்கு எதிராக தற்போது நடந்து வரும் 21ஆவது லீக் போட்டியில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் கைப்பற்றி உலகக் கோப்பையில் 2ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 21ஆவது லீக் போட்டி தற்போது தரம்சாலாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா டாஸ் வென்று பவுலிங் செய்தது. அதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தப் போட்டியில் முகமது ஷமிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஷமி 9ஆவது ஓவரின் தனது முதல் ஓவரை வீச வந்தார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே வில் யங் விக்கெட்டை கைப்பற்றினார்.
அதன் பிறகு ஷமி ஓவரில் ரச்சின் ரவீந்திரா கொடுத்த கேட்ச் வாய்ப்பை ரவீந்திர ஜடேஜா கோட்டைவிட்டார். இதையடுத்து ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் மாறி மாறி பந்து வீசினர். மேலும், பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் தொடர்ந்து பந்து வீசினர். கடைசியாக முகமது ஷமி பந்து வீச வந்தார். அதற்கு ஏற்ற பலன் கிடைத்தது. போட்டியின் 47.4ஆவது ஓவரில் மிட்செல் சாண்ட்னரை கிளீன் போல்டாக்கினார். அதன் பிறகு வந்த மேட் ஹென்றியை அடுத்த பந்திலேயே கிளீன் போல்டாக்கினார். கடைசியாக இந்திய அணிக்கு தண்ணி காட்டியா டேரில் மிட்செல்லை ஆட்டமிழக்கச் செய்தார்.
இதன் மூலமாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளார். மேலும், இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்ததன் மூலமாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் இந்திய வீரராக 2ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய பவுலர்களான கபில் தேவ், வெங்கடேஷ் பிரசாத், ராபின் சிங், ஆசிஷ் நெஹ்ரா, யுவராஜ் சிங் ஆகியோர் தலா ஒரு முறை உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
மேலும், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 2 முறை 5 விக்கெட்டிற்கு மேல் எடுத்தவர்கள் பட்டியலில் ஷமி இடம் பெற்றுள்ளார். மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளும், இம்ரான் தாஹீர் 5 விக்கெட்டுகளும், முகமது ஷமி 5 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளனர். ஷமியைத் தவிர வேறு எந்த பவுலரும் 2 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றவில்லை. உலகக் கோஒப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பில் அதிக விக்கெட்டுகள் கைபற்றியவர்களில் அனில் கும்ப்ளே சாதனையை முறியடித்துள்ளார்.
உலகக் கோப்பையில் இந்திய அணி சார்பில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள்:
ஜாகீர் கான் – 44
ஜவஹல் ஸ்ரீநாத் – 44
முகமது ஷமி – 36
அனில் கும்ப்ளே – 31
ஜஸ்ப்ரித் பும்ரா – 29
கபில் தேவ் – 28
இந்தப் போட்டியில் ஷமி சாதனை படைத்ததன் மூலமாக இனி வரும் உலகக் கோப்பை போட்டிகளில் ஷமிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அவர் விளையாடினால் ஜாகீர் கான் சாதனையை முறியடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்திய அணிக்கு இன்னும் 4 போட்டிகள் இருக்கிறது. இதில், இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.