மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவரான திரு. பங்காரு அடிகளார் உடல்நலக் குறைவால் காலமானார், அவருக்கு வயது 82. அவருடைய மறைவுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாள்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முற்போக்கு முறையை அமல்படுத்திய பங்காரு அடிகளார், தன்னை பின்பற்றுபவர்களாலும், ஆதிபராசக்தி கோயிலின் பக்தர்களாலும் ‘அம்மா’ என்று அழைக்கப்படுகிறார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஓராண்டு காலமாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த பங்காரு அடிகளார், தொடர் சிகிச்சை பெற்று வந்து நிலையில், கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் தனது 83ஆவது பிறந்தநாளை பங்காரு அடிகளார் கொண்டாடிய நிலையில், தற்போது அவரது உயிர் பிரிந்துள்ளது.
அவருடைய மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், “அம்மா என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட திரு. பங்காரு அடிகளார் அவர்கள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களே கருவறைக்குள் சென்று வழிபாடுகள் நடத்தும் புரட்சிகரமான நடைமுறைகளை வெளிப்படுத்தினார்”.
“கோவில் கருவறைக்குள் அனைத்து சாதியினரும் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக திமுக கழகம் பல ஆண்டுகளாக போராடி அதனை நடைமுறைப்படுத்தியும் வரும் நிலையில், அனைத்து பெண்களும் கருவறைக்குள் சென்று, அவர்களே பூசை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளார் அவர்களின் ஆன்மீக புரட்சி மிகவும் மதிப்புக்கு உரியது” என்றார்.
இந்நிலையில் பங்காரு அடிகளாரின் மறைவு செய்தி அறிந்த பக்தர்கள் பலரும் அவருடைய உடலை காண மேல்மருவத்தூர் பகுதிக்கு தொடர்ந்து வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட 6-மாவட்டத்தை சேர்ந்த காவலர்கள் வரவழைக்கப்பட உள்ளனர் என்றும், நாளை இப்பகுதியில் 6-மாவட்டத்தை சேர்ந்த 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.