வடக்கில் படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள சுமார் 9543 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றையதினம் (18) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் குறித்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
இதன்போது அவர் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் முப்படைகள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில், தயாரிக்கப்பட்ட விவரண அறிக்கையொன்றையும் சபாபீடத்திற்கு சமர்ப்பித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது கிளிநொச்சி மாவட்டத்தில் 4378.8 ஏக்கரும், யாழ் மாவட்டத்தில் 2433.79 ஏக்கரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 1578.27 ஏக்கரும், வவுனியா மாவட்டத்தில் 1021.55 ஏக்கரும், மன்னார் மாவட்டத்தில் 130.77 ஏக்கருமாக வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் 9543.18 ஏக்கர் காணிகள் படையினரால் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.