நவராத்திரி
துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என்ற முப்பெரும் தேவிகள் ஒரே வடிவமாகத் திருவுருவம் கொண்டு மகிஷாசுரனையும் அவனுடன் சேர்த்து அவனது அரக்கர் படைகளையும் அழித்த தினமே நவராத்திரி எனப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களில் முதல் 3 நாட்கள் துர்க்கையான பார்வதியையும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியையும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதியையும் 10-வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியையும் வணங்குதல் சிறப்பு. நவராத்திரியில், அம்பாளுக்கு விதவிதமான சுண்டல், பாயாச வகைகள் நிவேதனம் செய்து வழிபடுவது நல்லது.
நவராத்திரியில் சுண்டல் ஏன் அம்பாளுக்கு படைக்கப்படுகிறது?
தேவர்களுக்கு அமிர்தம் கொடையாக இருப்பது போல, பூமி தழைக்க, செழிக்க வான் மழை ஒரு கொடையாக உள்ளது. இது தேவர்களால் பூமிக்குக் கிடைக்கும் அமிர்தம் ஆகும். இதனால், பூமியானது சக்தி பெறுகிறது. “சக்தி” என்றாலே அது பெண்மையின் தன்மை தான். அந்த வகையில் அந்த சக்தியை சிறப்பிக்க பூமியில் விளைந்த விதவிதமான தானியங்கள் பக்குவப்படுத்தப்பட்டு நிவேதனம் செய்யப்படுகிறது. அவற்றுள் ‘சுண்டல்’ பிரதான இடத்தைப் பெறுகிறது.
நவராத்திரியில் சுண்டல் படைக்கப்பட இன்னொரு காரணமும் உண்டு. நவராத்திரி காலமான புரட்டாசி, ஐப்பசியில் அடைமழை ஏற்படும். இதனால் தோல்நோய் போன்றவை அதிகமாகும். இதைப் போக்கும் சக்தி சுண்டலுக்கு உண்டு என்று நம்பப்படுகிறது. அத்துடன் சுண்டலில் உள்ள புரதசத்து உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என்றும் நம்பப்படுகிறது.
நவராத்திரியில் அம்பாளை பூஜை செய்யும் விதம்
நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் ‘வைதிருதி’ யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது. நவராத்திரி ஒன்பது நாட்களிலும் நாராயணசுக்தம், புருஷசுக்தம், சகஸ்ரநாமம், சுதர்சனமந்திரம், கருடமந்திரம் முதலியவற்றை ஜபரூபமாக சொல்லி வழிபடுவது சிறப்பு. குறிப்பாக, நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.
கன்யா பூஜையை 9 நாட்களிலும் எப்படிச் செய்வது
நவராத்திரி முதல் நாள்
தேவி பகாவாதத்தின் படி மது – கைடவர் என்ற இரு அரக்கர்களை தேவி அழித்ததாக சொல்லப்படுகிறது. இப்படியான ஒரு சிறப்பான நாளில், 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும். பிரதமை திதி முடிவதற்குள், அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும். மல்லிகை, சிவப்புநிற அரளி, வில்வ பூக்களால் அம்பாளுக்கு அன்றைய தினத்தில் அர்ச்சனையை செய்தல் வேண்டும்.
வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, பருப்பு வடை போன்ற இவற்றை அன்றைய தினத்தில் நிவேதனம் செய்வது சிறப்பு. மகேஸ்வரிக்கு பிடித்த ராகம் தோடி ராகம்.
அந்த ராகத்தில் பாடி அம்பாளை வழிபடுதல் சிறப்பு. இப்படியான முறையில் அம்பாளை வழிபடுவதால் வறுமை நீங்கி – ஆயுள் பெருகும்.
நவராத்திரி இரண்டாவது நாள்
இந்த நாளில் அம்பாளின் ராஜ ராஜேஸ்வரி ஸ்வரூபத்தை வழிபடுதல் சிறப்பு. அதிலும், 3 வயது சிறுமியை கவுமாரி வடிவமாக வணங்குதல் வேண்டும். துவிதியை திதி முடிவதற்குள் பூஜையை முடித்து விடுதல் சிறப்பு. பூஜையின் சமயத்தில் அம்பாளை முல்லை, துளசி, மஞ்சள் நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும். உடன் புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம் போன்றவற்றை நிவேதனம் செய்தல் வேண்டும். தாய் ராஜராஜேஸ்வரிக்குப் பிடித்த கல்யாணி ராகத்தில் கீர்த்தனைகள் பாடலாம். தவறாமல் அன்றைய தினத்தில் வீட்டு வாசலில் மாவினால் கோலம் போட வேண்டும். இவ்விதத்தில், ராஜராஜேஸ்வரியை வணங்குவதால் உடல் ஆரோக்கியம் சிறக்கும். வெற்றிகள் குவியும் என்பது ஐதீகம்.
நவராத்திரி மூன்றாவது நாள்
இந்த நாளில் வாராகி தேவியை வழிபடுதல் சிறப்பு. குறிப்பாக, இந்த தினத்தில் வீட்டு வாசலில் மலர் கோலம் போட வேண்டும். 4 வயது சிறுமியை கல்யாணி வேடத்தில் அமர வைத்து பூஜிக்க வேண்டும். செண்பக மொட்டு, குங்குமத்தால் அம்பாளுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல் போன்றவற்றை பக்தியுடன் அம்பாளுக்குப் படைக்கலாம். இவை தவிர, அம்பாளுக்குப் பிடித்த காம்போதி ராகத்தில் பாடுதல் அன்றைய தினத்தில் சிறப்பு. இப்படியாக அம்பாளை பூஜிப்பதால் வாழ்வு செழிக்கும். வீட்டில் தனம், தானியம் பெருகும். வாழ்வின் கடைசி காலம் வரையில் பணப்புழக்கம் மகிழ்ச்சி தரும்.
நவராத்திரி நான்காவது நாள்
இந்த நாளில் மகாலக்ஷ்மியை பூஜிப்பது சிறப்பு. இந்த நாளில் 5 வயது சிறுமியை அம்பாளாக நினைத்து வழிபடுவார்கள். இந்த நாளில் சதுர்த்தி திதி முடிவதற்குள் அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலம் போடுதல் வேண்டும். செந்தாமரை, ரோஜா மற்றும் ஜாதி பூக்களால் அம்பாளை இந்த தினத்தில் அர்ச்சித்தல் சிறப்பு. தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்துவடை, பட்டாணி சுண்டல் போன்றவற்றை இந்த நாளில் நிவேதனம் செய்தல் சிறப்பு. இந்நாளில் பைரவி ராகத்தில் பாடி அம்பாளை வழிபடுதல் சிறப்பு. கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் அம்பாளுக்கு மாலை செய்து போடலாம். இப்படியாக அம்பாளை வழிபடுவதால் பணவரவு அதிகரிக்கும். கடன் தொல்லை நீங்கும்.
நவராத்திரி ஐந்தாவது நாள்
இன்றைய தினத்தில் அம்பாளை மோகினி ரூபம் அல்லது வைஷ்ணவி தேவியின் ரூபத்தில் வணங்குதல் சிறப்பு. குறிப்பாக, இந்த நாளில் 6 வயது சிறுமியை வைஷ்ணவி வேடத்தில் பூஜிக்க வேண்டும். பஞ்சமி திதி முடிவதற்குள் கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை தைலத்தால் அம்பாளை அலங்கரிக்க வேண்டும். அத்துடன், கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும். சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல் போன்றவற்றை அம்பாளுக்கு நிவேதனம் செய்யலாம். சங்கீத ஞானம் கொண்டவர்கள் பஞ்சமாவரணை கீர்த்தனைகள் பாட வேண்டும். உடன் பந்துவராளி ராகமும் பாடலாம். இப்படியாக இந்த தினத்தில் அம்பாளை நாம் பூஜிப்பதால் நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.
நவராத்திரி ஆறாவது நாள்
இந்த நாளில் சர்பராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கோலத்தில் சண்டிகாதேவியை வழிபடுதல் சிறப்பு. உடன் 7 வயது சிறுமியை இந்திராணியாக மற்றும் காளிகாவாக நினைத்து பூஜித்தல் வேண்டும். சஷ்டி திதி முடிவதற்குள் கடலை மாவினால் தேவியின் நாமத்தை கோலமிட்டு வழிபடுதல் சிறப்பு. பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம் போன்ற மலர்களில் ஒன்றால் அம்பாளை பூஜித்தல் சிறப்பு. தேங்காய் சாதம், தேங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம் போன்றவற்றை அம்பாளுக்கு நிவேதனமாகப் படைக்கலாம். சங்கீதம் தெரிந்தவர்கள் நீலாம்பரி ராகத்தில் அம்பாளை பாடி வணங்கலாம். இப்படியாக இந்த நாளில் அம்பாளை பூஜிப்பதால் வழக்குகளில் வெற்றி கிடைக்கப்பெறும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.
நவராத்திரி ஏழாவது நாள்
இந்த நாளில் சாம்பவித் துர்க்கையை வழிபடுதல் சிறப்பு. இவள் பொற் பீடத்தில் ஒரு பாதம் தாமரை மலரில் இருக்க வீணை வாசிக்கும் தோற்றத்துடன் காணப்படுவாள். உடன், 8 வயது சிறுமியை அம்பாளாக பாவித்து மரியாதை செலுத்துதல் சிறப்பு. சப்தமி திதி முடிவதற்குள் பூஜையை முடித்தல் சிறப்பு. அக்கணம் நறுமண மலர்களால் கோலமிட வேண்டும். தாழம்பு, தும்பை, மல்லிகை, முல்லை போன்ற மலர்களைக் கொண்டு அம்பாளை பூஜிக்கலாம். எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண் பொங்கல், கொண்டக் கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு போன்றவற்றை அம்பாளுக்கு நிவேதனம் செய்யலாம். இந்நாளில் அம்பாளை பிலஹரி ராகத்தில் பாடி பூஜித்தல் சிறப்பு. இதனால் அனைத்து நலன்களும் கிடைக்கப்பெறும்.
நவராத்திரி எட்டாவது நாள்
அம்பாளை நரசிம்ம தாரிணியாக வழிபடுதல் சிறப்பு. இவள் கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்ஹாரம் செய்யும் வடிவத்தில் காணப்படுவாள். இந்த நாளில் 9 வயது சிறுமியை மகா கவுரியாக பூஜிக்க வேண்டும். அஷ்டமி திதி முடிவதற்குள் பத்ம கோலம் இட்டு அம்பாளை வழிபடுதல் சிறப்பு. மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி போன்ற மலர்களால் அம்பாளை வழிபடுதல் சிறப்பு. பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல் போன்றவற்றை அம்பாளுக்குப் படைக்கலாம். அன்று புன்னகை வராளி ராகத்தில் பாடி அம்பாளை பூஜிக்கலாம். இப்படி வழிபடுவதால் கண் திருஷ்டி, செய்வினை கோளாறுகள் அகலும்.
நவராத்திரி ஒன்பதாவது நாள்
இந்த நாளில் அம்பாளை பரமேஸ்வரி அல்லது சுபத்ராதேவியாக வழிபடுதல் சிறப்பு. இந்நிலையில், அம்பாள் கையில் வில், பாணம், அங்குசம் மற்றும் சூலத்துடன் தோற்றம் அளிப்பாள். அன்றைய தினத்தில் 10 வயது சிறுமியை சாமுண்டி வடிவில் வழிபட வேண்டும். நவமி திதி முடிவதற்குள் பூஜையை முடித்து விடுதல் சிறப்பு. அம்பாளுக்கு வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும்.
தாமரை, மரிக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள் போன்றவற்றை சாற்றி அம்பாளை வழிபடுதல் சிறப்பு. சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை, சுண்டல், கடலை, எள் பாயாசம், கேசரி, பொட்டுக்கடலை, எள் உருண்டை போன்றவற்றை அம்பாளுக்கு நிவேதனம் செய்யலாம். சங்கீதம் தெரிந்தவர்கள் வசந்த ராக கீர்த்தனம் பாடி தேவியை மகிழ்விக்கலாம். இப்படியாக அம்பாளை வழிபடுவதால் சந்ததி விருத்தி மற்றும் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் நடந்தேறும்.
விஜயதசமியில் அம்பாளை பூஜை செய்யும் விதம்
நவராத்திரியின் பத்தாவது நாள் எனப்படும் விஜயதசமியில். அம்பிகையை ஸ்தூல வடிவத்தில் விஜயா என்ற பெயரில் வணங்குதல் சிறப்பு. அன்றைய தினம் தசமி திதி முடிவதற்குள் பூஜையை முடித்து விடுதல் நன்மை தரும். அம்பாளும் மூன்று சக்திகளான துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று பெரும் சக்திகள் ஒன்று இணைந்து தீய அரக்க சக்தியை அழித்து, வெற்றி கொண்டு அனைவருக்கும் நன்மைகளை அள்ளித் தந்து அருள் பாலிக்கும் சுபநாள். இன்று தொடங்கும் எல்லா காரியங்களும் வெற்றி மீது வெற்றி பெறும். இந்நிலையில், பால் பாயாசம், காராமணி சுண்டல், இனிப்பு வகைகள் என அனைத்தையுமே அம்பாளுக்கு இன்றைய தினத்தில் படைக்கலாம். உடன் வாசனை மலர்கள் கொண்டு அர்ச்சிப்பது சிறப்பு.
இப்படியாக மேற்கண்ட படி நவராத்திரி பூஜைகளை செய்தால் எல்லா வளங்களும் நலங்களும் கிடைக்கும்.