புரட்டாசி மகாளய அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து இப்படி வழிபட்டால் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் மற்றும் திருமணம் கைகூடும்.புரட்டாசி மகாளய அமாவாசையானது, இம்மாதம் 14ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், நம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பித்ரு சாபம் நீங்கி குடும்பத்திற்கு விருத்தி உண்டாகும் என்பது ஐதீகம்.
புரட்டாசி மகாளய அமாவாசை வழிபாடு எப்படி செய்ய வேண்டும்? :
இந்த அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து விளக்கேற்றி அவர்களை வழிப்பட வேண்டும். அதுமட்டுமின்றி இந்நாளில் ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இறந்தவர்களின் ஆத்மா மோட்சம் அடையும் என்பது நம்பிக்கை.
பொதுவாகவே அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் இந்த புரட்டாசி மாதத்தில் பௌர்ணமிக்கு பிறகு வரும் நாட்களில் முன்னோரை நினைத்து வழிபட வேண்டும். இதனால் குடும்பத்தில் இருக்கும் பித்ருக்களின் சாபம் நீங்கி வீட்டில் குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும் மற்றும் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.
இந்த அமாவாசை நாளில் ஆண்கள் மற்றும் பெண்கள் செய்யவேண்டியது:
இந்த அமாவாசை நாளில் ஆண்கள், தங்கள் முன்னோர்கள் அல்லது ரத்த சொந்தத்தை இழந்தால் விரதம் இருக்கலாம். மேலும் அவர்களை நினைத்து எள்ளுநீர் தெளித்து, தர்ப்பணம் கொடுக்கலாம். அதுபோல் பெண்கள் தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களுக்கு பிடித்த உணவுகளை தயாரித்து படைக்கலாம்.
தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நேரம்:
இந்தப் புரட்டாசி மாத அமாவாசையானது, இம்மாதம் 14ஆம் தேதி, அதாவது வரும் சனிகிழமை வருகிறது. இந்நாளில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நேரமாகும்.
அதுபோல், வீட்டில் இருக்கும் முன்னோர்களின் படத்தை வீட்டின் மத்தியில் வைத்து அவர்களுக்கு பிடித்த உணவுகளை இலையில் பரிமாறி காலை 10.30 மணிமுதல் மதியம் 1.25-க்குள் தளிகை போடவேண்டும். அதன்பிறகே காகத்திற்கு சாதம் வைக்க வேண்டும். இதன் பின்னர்தான் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட வேண்டும்.
செய்ய முடியாதவர்கள் செய்ய வேண்டியவை:
மேலே கூறியுள்ள படி ஏதேனும் ஒன்றை உங்களால் செய்ய முடியவில்லை என்றால் அமாவாசை நாளில் மாலை வேளையில் உங்கள் வீட்டிலோ அல்லது கோவிலுக்கு சென்றோ நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி வைத்து முன்னோர்களுக்கு மோட்சம் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் மனதார அவர்களை நினைத்து வழிபட வேண்டும்.