இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தனின் நாடு கடத்தல் வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக நீதிபதி சுந்தர் மோகன் அறிவித்துள்ளார்.
வழக்கறிஞராக இருந்தபோது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரானதால், தற்போது வழக்கை தான் விசாரிப்பது முறையாக இருக்காது என தெரிவித்துள்ளார்.
கடந்த 1991ஆம் ஆண்டு மே 21ம் திகதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 7 பேரும் கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் வல்வெட்டியில் வசிக்கும் தனது 75 வயதுடைய தாயார் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பதால், தாம் உடனடியாக இலங்கை செல்ல விரும்புவதாக சாந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மனு வழங்கியுள்ளதாகவும், தனது பிரதிநிதித்துவங்கள் இன்னும் பரிசீலிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.