பிரித்தானியாவில் வில் அம்பு ஆயுதத்துடன் எலிசபெத் ராணியாரை கொல்லும் நோக்கில் வந்த இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள விண்ட்சர் மாளிகையில் கடந்த 2021 டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் நாளில் இச்சம்பவம் நடந்துள்ளது. 21 வயது ஜஸ்வந்த் சிங் சைல் என்பவரை அதிகாரிகள் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்தன.
சம்பவம் நடக்கும் போது, ராணியார் விண்ட்சர் மாளிகையில் தங்கியிருந்துள்ளார் என்றே கூறப்படுகிறது. காலை 8.10 மணியளவில் விண்ட்சர் மாளிகையில் பணியில் இருந்த இரு அதிகாரிகள் குறித்த இளைஞரை முதலில் கண்டுள்ளனர்.
விசாரித்ததில், ராணியாரை கொல்ல தாம் வந்துள்ளதாக அதிகாரிகளிடம் ஜஸ்வந்த் சிங் தெரிவித்துள்ளார். சுதாரித்துக் கொண்ட அதிகாரிகள், அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். 1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக்கில் இந்தியர்கள் பிரிட்டிஷ் காலனி படைகளால் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக மகாராணி மீது தாக்குதல் நடத்த முயன்றதாக சைல் கூறினார்.
இந்த நிலையில், வழக்கின் முழு விசாரணையும் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து, நீதிமன்றம் அந்த இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்துள்ளது.
தண்டனை காலத்தின் முதல் பகுதியை மனநல மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபடி சைல் அனுபவிக்க வேண்டும் எனவும் அவரது மனநலம் மேம்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்படுவார் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.