காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
கர்நாடக மாநில நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் அணையின் பாதுகாப்பை கருதி காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றின் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழ்நாட்டில் எல்லையான பிலிகுண்டுக்கு வந்து சேர்ந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவியில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரம் கனஅடியாக நீர் வந்துகொண்டிருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அத்துடன் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது.
இந்நிலையில், ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் பரிசல் இயக்க தடை தொடருவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் நீராடி வருகின்றனர்.