மதுரையில் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சிசை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ராஜாஜி அரசு மத்துவமனை மற்றும் மதுரை மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ‘உதிரம் 2023’ என்கிற தலைப்பில் ரத்த தான விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. இன்று காலை நடந்த இந்த விழிப்புணர்வு மராத்தான் போட்டியில் பங்கேற்ற, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்துவந்த தினேஷுக்கு மராத்தான் முடிந்து 1 மணி நேரம் கழித்து திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரின் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் மிகக்குறைவாக இருந்தது, சுய நினைவு திரும்பவே இல்லை எனவும், காலை 10.10 மணிக்கு திடீர் இதய அடைப்பு ஏற்பட்டு, 10.45 மணிக்கு உயிர் பிரிந்ததாகவும் ராஜாஜி அரசு மருத்துவமனை டீன் தெரிவித்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற மாரத்தானில் பங்கேற்ற மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.