சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.
கடுமையான வெயில் மற்றும் திடீர் மழை காரணமாக இந்த ஆண்டு தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தக்காளி வரத்து குறைந்து, விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. அத்துடன் வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளியின் வரத்தும் வெகுவாக குறைந்துள்ளதே விலையேற்றத்துக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தக்காளி கிலோ ரூ.150க்கு விற்கப்பட்டதால் இல்லத்தரசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து தமிழ்நாடு அரசு பண்ணை பசுமை நுகர்வோர் கடை மற்றும் நியாய விலைக்கடைகளில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தக்காளி விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்றைய தினம் கிலோ ₹120க்கு விற்பனையான முதல் ரக தக்காளி, இன்று ₹10 உயர்ந்து, ₹130க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிறிய தக்காளி கிலோ ₹100க்கு விற்பனை செய்யப்படுகிறது!