உலகம் முழுவதும் உள்ள ட்விட்டர் பயனர்களுக்கு எலான் மஸ்க் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளதால், பயனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
உலக அளவில் முன்னணி சமூக வலைதளமாக இருக்கும் ட்விட்டர், நேற்று இரவு திடீரென முடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ட்விட்டர் முடங்கியதால் பயனர்கள் அவதியடைந்தனர். பெரும்பாலான பயனர்கள் ட்வீட் செய்ய முடியாமல் தவித்தனர். சாதாரன பயனர்கள் பலரும் எந்த ட்வீட்டுகளையும் பார்க்க முடியாமல் அவதிப்பட்டனர். சில மணி நேரங்களில் ட்விட்டர் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தாலும், பயனர்களால் ட்வீட்டுகளை பார்க்க முடியாத நிலை இருந்தது. அப்போது, பயனர்கள் பலரும் ட்விட்டர் முடக்கத்தை கேலி செய்து ஏராளமான மீம்ஸ்களை பதிவிட்டு ட்விட்டரையே திணறடித்தனர்.
அடுத்த சில மணி நேரத்தில் எலான் மஸ்க் அதிரடி அறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “டேட்டா ஸ்கிராப்பிங் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சில தற்காலிக கட்டுபாடுகள் கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும் அதன்படி வெரிஃபைடு அதாவது ப்ளூ டிக் சந்தாதாரர்கள் ஒரு நாளைக்கு 6000 பதிவுகளைப் படிக்க முடியும். ட்விட்டரில் இருக்கும் மற்ற சாதாரண பயனாளர்கள் 600 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும். புதிதாக ட்விட்டருக்கு வரும் unverified பயனாளர்கள் இனி ஒரு நாளைக்கு 300 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும்” என்று அறிவித்தார்.
எலான் மஸ்கின் இந்த அறிவிப்பு ட்விட்டர் பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ட்வீட்களை படிப்பதற்கு கூட கட்டுப்பாடுகளாக என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பொதுவாகவே சமூல வலைதளங்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறோம், எவ்வளவு இம்ப்ரெஷன்ஸ் வந்துள்ளது என்பதை பொறுத்தே வருவாய் கிடைக்கும். ஆனால் ட்விட்டர் நிறுவனம் தங்களது பயனர்களை ட்விட்டர் செயலியை பயன்படுத்த விடாமல் கட்டுப்படுத்துவதாக சாடியுள்ளனர். இதன்மூலம் ட்விட்டர் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.