கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் நடைபெறும், ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சன திருவிழாவும் சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலை இரு நேரங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. இதேபோல் கடந்த 21-ந் தேதி தெருவடைச்சான் உற்சவம் நடைபெற்றது.
இந்நிலையில், ஆனி திருமஞ்சன திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 5 மணி அளவில் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. 5 தனித்தனி தேர்களில் விநாயகர், நடராஜர், சிவகாமி அம்பாள், சண்டிகேஸ்வரர் எழுந்தருளியுள்ளனர். அலங்கரிக்கப்பட்ட 5 தேர்களும் நான்கு ரத வீதிகளில் வலம் வருகிறது. ஏராளமான பக்தர்கள் சாலைகளின் இரு புறமும் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தேரோட்டத்தையொட்டி, கடலூர் எஸ்.பி., தலைமையில் சுமார் 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.