ஒடிசா ரயில் விபத்தின் தற்போதைய நிலை குறித்து ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பிதமர் மோடியிடம் விளக்கியுள்ளார்.
ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் பகனாகா பஜார் அருகே நேற்று முன் தினம் இரவு பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகளவில் சேதமடைந்த நிலையில், அதில் பயணித்த பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுவரை ஒடிசா ரயில் விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைப்பு பணியில் 7 பொக்லைன் இயந்திரங்கள், 140 டன் திறன் கனரக கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ரயில் விபத்தின் தற்போதையை நிலை பற்றி பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் நவீன் பட்னாயக் விவரங்களை விளக்கி உள்ளார். இன்று காலை தொலைபேசி வழியே பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு, ஒடிசா ரயில் விபத்தில் தற்போதுள்ள சூழ்நிலை பற்றி எடுத்து கூறியுள்ளார். ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் காயமடைந்த பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை பற்றியும் கூறியுள்ளார்.