கம்பம் நகரில் சுற்றித்திரியும் அரிசிக்கொம்பன் யானை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் இடம்பெயர்ந்து இன்று காலை சுருளிப்பட்டியில் உள்ள தோப்பில் முகாமிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு பெரியார் புலிகள் காப்பகத்தில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை, தற்போது மீண்டும் தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் புகுந்துள்ளது. இந்த யானை இதுவரை 18 பேரை கொன்றுள்ளதால், நேற்று திடீரென யானை மீண்டும் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். வனத்துறையினர் யானையை பின் தொடர்ந்தபடியே பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து யானையின் நடமாட்டம் இருப்பதால் பாதுகாப்பு கருதி கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
கம்பம் மின்வாரிய அலுவலகம் அருகே வாழைத்தோட்டத்திற்குள் தஞ்சமடைந்த அரிக்கொம்பன் யானை, சுமார் 10 கிலோமீட்டர் தூரம் இடம்பெயர்ந்து இன்று காலை சுருளிப்பட்டியில் உள்ள தோப்பில் சுற்றித்திரிந்து வருகிறது. அரிசிக்கொம்பன் யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க பொள்ளாச்சியில் இருந்து சுயம்பு என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் முதுமலையில் இருந்து மேலும் 2 யானைகள் வரவழைக்கப்படுகின்றன.
இந்த 3 கும்கி யானைகளின் உதவியுடன் அரிக்கொம்பனை மயக்க ஊசி மூலம் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அரிக்கொம்பன் யானையை பிடித்து சரணாலயங்கள் பகுதிகளில் விட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் அரிசி கொம்பன் காட்டு யானை கம்பம் நகரை விட்டு, சுருளிப்பட்டி கிராமத்தில் புகுந்துள்ளதால் அங்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், திராட்சை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்ல தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.