108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்குவதுமான, வைகுண்ட பெருமாள் திருக்கோவில் என அழைக்கப்படும் வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரமோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
வைகாசி மாத பிரம்மோற்சவ, எடுப்பு தேர் உற்சவத்தை முன்னிட்டு வைகுண்ட பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பட்டாடை உடுத்தி திருவாபரணங்கள் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு ராஜ அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எடுப்பு தேரில் எழுந்தருள செய்தனர். பின்னர் எடுப்பு தேரில் காட்சியளித்த வைகுண்ட பெருமாளுக்கு சிறப்பு ஆரத்தி காண்பிக்கப்பட்டு வேத மந்திரங்கள் ஒலிக்க, மேளதாளம் முழங்க காஞ்சி நகரின் நான்கு ராஜ வீதிகளில் திருவீதி உலா வந்தார்.
இந்த வைகாசி மாத பிரம்மோற்சவ எடுப்பு தேர் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.