மது வாங்க வருவோரிடம் ₹2000 நோட்டுகளை வாங்காதீர்… ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் கண்டிப்பான உத்தரவு ..

by Editor News

டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் வாடிக்கையாளரிடம் 2,000 ரூபாய் நோட்டுக்களை பெற வேண்டாம் என டாஸ்மாக் நிர்வாகம், டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதனை மாற்றுவதற்கு ஏதுவாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதற்கான தேவை நிறைவடைந்த நிலையில், கடந்த 2018-19 ஆம் ஆண்டில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியன்று, சுமார் 6 லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாக ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

ஆனால், கடந்த மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, சுமார் 3 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருப்பதாக ஆர்.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது. மேலும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பெரும்பாலான பண பரிவர்த்தனைகளில் இடம்பெறவில்லை என்றும் ஆர்.பி.ஐ. கூறியுள்ளது.

இந்நிலையில், பொதுமக்களிடம் இருக்கும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதன் படி, வரும் 23 ஆம் தேதி முதல், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள ஆர்.பி.ஐ. அறிவுறுத்தியுள்ளது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்றும் மே 23 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கிடையே டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்கக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக அந்ததந்த மாவட்ட மேலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மே 20-ம் தேதி முதல் ரூ.2,000 நோட்டுகள் மதுக்கடையில் எக்காரணம் கொண்டும் வாங்கக்கூடாது, மதுப்பிரியர்கள் அவ்வாறு வந்து தொந்தரவு செய்தால் வங்கியில் மாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கவும், மீறி 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கினால் அத்தொகை சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களது பொறுப்பில் தீர்வு செய்வதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment