இளநிலை மருத்துவப் படிப்பில் 85 சதவீத இடங்களையும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடங்களையும் மாநில அரசுகளே நிரப்பி வருகின்றன. மீதமுள்ள இடங்கள் மத்திய சுகாதாரத் துறையின் மருத்துவ கலந்தாய்வு கமிட்டி மூலம் நிரப்பப்படுகின்றன. மேலும், எய்ம்ஸ், ஜிப்மர், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களும் மருத்துவ கலந்தாய்வு கமிட்டி மூலமே நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ இடங்களையும் மருத்துவ கலந்தாய்வு கமிட்டி மூலம் நிரப்ப மத்திய சுகாதாரத் துறை பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக, மத்திய சுகாதார சேவைகளுக்கான இயக்குநர் அதுல் கோயல் கடந்த மார்ச் மாதமே மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஒரு மாணவர் அகில இந்திய கோட்டா, மாநில கோட்டா, நிகர்நிலை பல்கலைகழகங்கள் என வெவ்வேறு கலந்தாய்வுகளுக்கு விண்ணப்பிப்பதை தவிர்க்கும் வகையில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டுமே 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் நிலையில், பொது மருத்துவ கலந்தாய்வின் காரணமாக மிகவும் பிற்படுத்தpபட்டோர் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து இடங்களையும் மருத்துவ கலந்தாய்வு கமிட்டி நிரப்பினாலும் மாநிலங்களில் பின்பற்றப்படும் வழிமுறையே பின்பற்றப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், மாநிலங்களில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு விவரங்களையும் மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் அந்தந்த மாநில அரசுகளிடம் கேட்டுள்ளது.
இது குறித்து மருத்துவத்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு கேட்ட போது, பொது மருத்துவ கலந்தாய்வுக்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் சுகாதாரத்துறை செயலர் மூலம் மத்திய சுகாதாரத் துறைக்கு பதில் கடிதம் அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார்.
மத்திய அரசு கேட்டபடி இட ஒதுக்கீடு விவரங்களை அளித்ததோடு இந்த நடைமுறையின்படி மாநில அரசே இடங்களை நிரப்பிக் கொள்ளும் என தெரிவித்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.