கள்ளச்சாராயம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும், சிறிது நேரம் போதைக்காக வாழ்க்கையே இழக்க வேண்டுமா? என்பதை எடுத்துக் கொள்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை பேட்டி அளித்துள்ளார்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் சிக்கிம் மாநில விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு பேசிய புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, “கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மிகவும் வருத்தத்தக்க விஷயம். இது ஒரு கரும்புள்ளி என்று சொல்ல வேண்டும். இறப்பு அதிகரிப்பதால் துயரத்தை தாங்காமல் இருக்க முடியவில்லை. கள்ளச் சாராயம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும். இதை தயாரிப்போர், முதலில் இது எவ்வளவு உடம்பிற்கு கேடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கண் பார்வை போய்விடும். சிறிது நேரம் போதைக்காக வாழ்க்கையே இழக்க வேண்டுமா என்பதை எடுத்துக் கொள்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உயர்தர சிகிச்சை கொடுத்தாலும் காப்பாற்ற முடியாத சூழல் மனதிற்கு வருத்தம் அளிக்கிறது. இது கட்டுப்படுத்தப்பட வேண்டும். எடுத்து கொள்பவர்கள் இனி தவறான பாதை செல்ல வேண்டாம். புதுச்சேரியில் போதைப்பொருள் மற்றும் கள்ள சாராயம் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது எங்கே இருந்து சென்றிருக்கும் என்று கூறி கடமையை, தட்டித் களிப்பதை விட எந்த பகுதியில் இருந்து வந்தாலும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். புதுச்சேரியில் இருந்து வந்ததாக கூறி அதில் எங்களுக்கு பொறுப்பு இல்லை என்று சொல்லிவிட முடியாது. புதுச்சேரியில் அது போன்ற சூழல் இருந்தால் கட்டுப்படுத்தப்படும். அத்துடன் வலுவான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். எல்லைகளை கண்காணித்தால் மட்டும் போதாது, அனைவருக்கும் பொறுப்புணர்வும், எச்சரிக்கை உணர்வும் இருக்க வேண்டும்” என்றார்.