அதிபர் தேர்தல் சவாலை ஏற்றுக்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (15) கூடிய எதிர்க்கட்சிகளின் சர்வகட்சி ஒன்றியத்தின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“அரசாங்கம் தாம் நினைக்கும் நேரங்களில், தாம் நினைக்கும் விதத்தில் தமது காலக்கெடுவுக்கு ஏற்ற வகையில் தேர்தல் வரைபடத்தை உருவாக்குவது ஜனநாயகச் செயல் அல்ல.
அதிபரோ அல்லது அவருக்கு ஆதரவானோரின் விருப்பத்திற்கேற்பவோ தேர்தல் வரைபடத்தை தயாரிப்பது தவறு.
ஆனால் அரசாங்கம் கொண்டுவருவதற்கு தயாராக உள்ள, அதிபர் தேர்தலை திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாக நடத்தும் பிரேரணையை எதிர்கட்சியாக முழுமையாக ஆதரிக்கிறோம்.
அதனை விரைவில் நடத்துவதற்கு தேவையான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கொண்டுவருவதற்குத் தேவையான பூரண ஒத்துழைப்பை நல்கத் தயார்.
எதிர்க்கட்சிகளின் சகல அரசியல் சக்திகளையும் பயன்படுத்தி தேசிய கொள்கைகள் மற்றும் தேசிய அபிலாஷைகளை மையமாகக் கொண்ட பயணத்திற்கு தயார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் பல்வேறு செய்திகளை கட்டமைக்காமல் முறையாக அதிபர் தேர்தலை நடத்தினால், அதற்குத் தேவையான சகல ஒத்துழைப்பை வழங்குவோம்.
அதிபர் தேர்தலின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் அதிபரொருவரின் கீழ், தற்போதைய அதிபர் தலைமையிலான அரசாங்கத்தினால் இழுதடிப்புச் செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படும்” – என்றார்.