ஒவ்வொரு மாதமும் வருகிற ஏகாதசியும் ரொம்பவே விசேஷம். ஏகாதசியில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் ஏராளம். ஏகாதசியில் விரதம் இருந்து, பெருமாளை ஆராதிப்பார்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வார்கள். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். இதேபோல், ஏகாதசி நாளில் இருந்து எவருக்கேனும் உணவு வழங்குவதும் மிகுந்த புண்ணியத்தைத் தரக்கூடியது. வீட்டில் புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து பெருமாளைப் பிரார்த்தித்து, நைவேத்தியத்தை அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவது வாழ்வில் வளம் சேர்க்கும்.
வளர்பிறை, தேய்பிறை என மாதத்திற்கு இரண்டு ஏகாதசிகள் வரும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் தனி பெயர், சிறப்பு, கதை உண்டு. அப்படி மே – ஜூன் மாதங்களில் ஜேஷாஸ்த மாதத்தில் வரும் ஏகாதசிக்கு அபரா ஏகாதசி என்று பெயர். அபரா என்றால் அளவில்லாத என்று பொருள். அளவில்லாத நலன்களை தரக்கூடியது இந்த ஏகாதசி ஆகும்.
அபரா ஏகாதசி விரதத்தின் முக்கியத்துவம் மற்றும் சிறப்புக்கள்
எவர் ஒருவர் அபரா ஏகாதசியில் விரதம் கடைபிடித்து, தூய அன்பு, பக்தியுடன் என்னை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு என்னுடைய அருளுடன் மகிழ்ச்சி, வளம் ஆகியவை கிடைக்கும். அதோடு அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி, அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என கிருஷ்ணர் கூறுகிறார்.
இந்த ஆண்டு அபரா ஏகாதசியானது மே 15 ம் தேதி வருகிறது. வைகாசி மாதத்தின் முதல் நாளே இந்த புண்ணியமான ஏகாதசி வருகிறது. மே 15 ம் தேதி அதிகாலை 02.46 மணிக்கு ஏகாதசி துவங்குகிறது. மே 16 ம் தேதி நள்ளிரவு 01.03 வரை ஏகாதசி திதி உள்ளது. அதற்கு பிறகு துவாதசி திதி துவங்குகிறது. பாரணை செய்யும் நேரமாக மே 16 ம் தேதி காலை 06.41 மணி முதல் 08.13 வரை என கணிக்கப்பட்டுள்ளது .
விரதம் இருக்கும் முறை :
1. உடலும் மனமும் தூய்மையுடன் இந்த ஏகாதசி விரதத்தை பக்தர்கள் மேற்கொள்ள வேண்டும்.
2. இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால், முக்தி கிடைக்கும்.
3. விரதம் இருப்பவர்கள் அதிகாலையிலேயே எழுந்து, நீராடி, பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்.
4. பெருமாளுக்கு துளசி மாலை, மலர்கள் அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
5. மாலையில் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாங்களை நைவேத்தியங்களாக படைத்து வழிபட வேண்டும்.
6. அருகில் உள்ள விஷ்ணு ஆலயங்களுக்கு சென்று வழிபட வேண்டும்.
சொல்ல வேண்டிய மந்திரம் :
1. ஓம் நமோ பகவதே வாசுதேவாய
2. ஹரி ஓம் நமோ நாராயணாய
3. ஸ்ரீ கிருஷ்ண கோவிந்த ஹரே முராரி
ஹே நாதா நாராயண் வாசுதேவா
4. அச்சுதம் கேசவம் கிருஷ்ண தாமோதரம், ராம நாராயணம் ஜானகி வல்லபம்
5. ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே