கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப்பில் பலருக்கும் வெளிநாட்டு எண்கள் மூலம் சர்வதேச அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி வருகின்றன. இது மெய் நிகர் எண்ணைப் பயன்படுத்தி நடக்கிறது. முதலில் அவர்கள் உங்களுக்கு வேலை தருவது போல் வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகள் மூலம் தொடர்பு கொள்வார்கள். இதுபோன்று வாட்ஸ் அப்பில் வரும் சர்வதேச எண்களின் போலி அழைப்புகள் புதிதல்ல, ஆனால் கடந்த சில நாட்களாக இது அதிகரித்து வருகிறது. இந்த மோசடியில், மோசடி கும்பல், வெளிநாட்டில் உள்ள பிரபல நிறுவனங்களின் பெயரைக் குறிப்பிட்டு அதில் பகுதி நேர வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது என்பது போன்று அழைப்பு விடுப்பார்கள். அந்தக் குறுஞ்செய்தியை நம்பி நீங்கள் பதில் அளித்தால், அவர்கள் உங்களுக்கு வேலை தருவது போல் தருவார்கள். பிறகு அதற்கான ஊதியமாக சிறிய தொகையை உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்புவார்கள்.
முதலில் சின்னசின்ன வேலைகளுக்கு, உங்கள் வங்கி கணக்கிற்குப் பணம் வரும். உதாரணத்திற்கு, 3 யூ-டியூப் வீடியோக்களுக்கு லைக் போடுங்கள் என்ற வேலை கொடுக்கப்பட்டு, அதற்கான சன்மானமாக ரூ.50 அல்லது ரூ.150 உங்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படலாம். பணம் வந்ததால் நீங்கள் அதனை நம்ப ஆரம்பிப்பீர்கள். நீங்கள் வேலை செய்யும் பொழுது ஏதேனும் காரணம் சொல்லி, அதை சரிசெய்தால்தான் இனிமேல் உங்களுக்குப் பணம் வரும் என்று கூறி உங்களிடம் பணம் பறிப்பார்கள். நீங்களும் அவர்கள் கூறும் காரணத்தை நம்பி உங்கள் பணத்தைக் கொடுத்து இழந்துவிடுவீர்கள். பிறகுதான் தெரியும் நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதே. எனவே இது போன்ற மோசடியில் இருந்து எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.