புதிய தாய்மார்கள் பலருக்கும் குழந்தை வளர்ப்பு என்பது சவால் நிறைந்த காரியம் தான். பிரசவத்தின்போது அச்சத்தையும், தனக்கு யாருமே இல்லை என்பதைப் போலவும் உணருகின்ற தாய்மார்கள், பிரசவத்திற்குப் பிறகும் அதையேதான் நினைக்கின்றனர். பிரசவத்திற்குப் பிறகான காலத்தில் உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மாற்றங்களை சந்திப்பதுடன், ஹார்மோன் மாற்றங்களின் விளைவுகளையும் பெண்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் கவலை மற்றும் மன அழுத்தம் பெண்களின் மனதை ஆக்கிரமித்துக் கொள்கிறது.
புதிய தாய்மாராக தனக்குள்ள பொறுப்பு என்ன என்பதில் பெண்கள் தடுமாற்றம் அடையத் தொடங்குகின்றனர். தங்கள் பிரச்சனைகளை யாரிடமும் விவாதிப்பதற்கு அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
பிரசவத்திற்குப் பிறகு மன ரீதியான பிரச்சினையை எதிர்கொள்வதன் அறிகுறிகள்:
நம்பிக்கையற்ற நிலை, வெறுமை உணர்வு, சோகம், அதிகப்படியான தூக்கம் அல்லது தூக்கமின்மை, ஆர்வமின்மை, சோர்வு, கவனச்சிதறல், ஆற்றல் இழப்பு போன்றவை பிரசவத்திற்குப் பிறகு மன ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆகும். அரிதிலும், அரிதாக சில தாய்மார்களுக்கு தற்கொலை எண்ணம் கூட வருகின்றதாம். மேற்கண்ட கவலைகள் தற்காலிகமானது என்றாலும், இவை நீடித்த அளவில் இருப்பின் அதுகுறித்து மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.
பிரச்சினையை எதிர்கொள்வது எப்படி:
தன்னையும், தன் குழந்தையையும் ஒருசேர கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு புதிய தாய்மார்களுக்கு ஏற்படுகிறது. ஆனால், அவர்களுக்கும் எல்லோரையும் போல இரண்டு கைகளும், ஒரு மனதும் தானே இருக்கிறது! ஆக, புதிய தாய்மார்களுக்கு உதவும் கரங்கள் தேவைப்படும் என்பதில் சந்தேகமே இல்லை. கணவர், தாயார், மாமியார், மாமனார், சகோதரிகள், நாத்தனார் என ஏதோ ஒரு உறவு புதிய தாய்மார்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் தாய்மார்களே பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடாமல் குழந்தை பராமரிப்பு முதல் வீட்டு வேலைகள் வரை பலவற்றிலும் அவர்களோடு தோள் நிற்க வேண்டும் .