தமிழகத்தில் 12ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு ..

by Editor News

வட தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை உருவாகியது. இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக மேலும் வலுபெறக்கூடும். இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 11-ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம் – மியன்மார் கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்ட்ரி வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்நிலையில் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 12ஆம் தேதி வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அத்துடன் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 – 4 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

Related Posts

Leave a Comment