சித்திரை திருவிழாவுக்காக மே 3ல் அழகர்கோயிலில் இருந்து தங்கப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் கள்ளழகர் மதுரையை நோக்கி புறப்பட்டார். மே 4ல் மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெற்றது. மே 5 ல் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை, தொடர்ந்து கள்ளழகருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.
மே 6 ல் வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். மே 7 ல் திவான் ராமராயர் மண்டபத்தில் கள்ளழகருக்கு விடிய விடிய தசாவதாரம் நடைபெற்றது.
நேற்று இரவு தல்லாகுளத்தில் உள்ள இராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் கள்ளழகருக்கு சந்தனம், மஞ்சள், பால், தயிர், தேன், இளநீர், நவதானியம், வாசனை திரவியங்கள், பழங்கள், உள்ளிட்டவைகளை கொண்டு கள்ளழகருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து மல்லிகைப்பூ, சம்மங்கி, கனகாம்பரம், ரோஸ், துளசி, கோழிக்கொண்டை ஆகிய பூக்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லாக்கில் கள்ளழகர் தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோவில் முன் எழுந்தருளினார்.
கருப்பண்ணசாமி கோவில் சார்பில் வழங்கப்பட்ட மாலையை அணிந்து கொண்ட கள்ளழகருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பூப்பல்லாக்கில் கள்ளர் திருக்கோலத்தில் கள்ளழகர் அழகர் மலையினை நோக்கி புறப்பட்டார். இலட்சக்கணக்கான பக்தர்கள் பூப்பல்லாக்கில் எழுந்தருளிய கள்ளழகரை தரிசனம் செய்தனர். மே 9 இரவு கள்ளழகர் தனது இருப்பிடமான அழகர்கோவிலுக்கு சென்றடைவார்.