ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் குஜராத் மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கிய போட்டிகள் மே 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியு, குருணல் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. குஜராத் அணியை பொறுத்தவரையில், 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இதேபோல் லக்னோ அணியை பொருத்தவரையில் 10 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங்கின் போது பந்தை பிடிக்க முயன்ற போது வலது தொடையில் காயம் ஏற்பட்டதால் அவர் இந்த தொடரில் இருந்தே விலகியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு பதிலாக குருணல் பாண்ட்யா கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.